பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்க மத்தியஸ்தம் செய்தது. அதன்பேரில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. இதையடுத்து, மே 10ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமல் ஆனது. எனினும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 'வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தகவல்களை பெற முயற்சி செய்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் என்று கூறி, எந்த நபர் தொடர்பு கொண்டாலும் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எண்ணை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்போல் வேடமிட்டுச் செயல்படும், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். பாகிஸ்தான் உளவாளி இந்திய பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, பாதுகாப்பு அதிகாரியாக நடித்து, ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தகவல்களைப் பெற முயற்சிக்கிறார்கள். ஆகையால், தயவுசெய்து இதுபோன்ற முயற்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜெய்சால்மர் காவல்துறை கண்காணிப்பாளர் சுதீர் சவுத்ரி, ”இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், எல்லைப் பகுதிகளில் சந்தேகிக்கப்படும் உளவு அழைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன. தொலைபேசி அழைப்புகள் மூலம் முக்கியமான தகவல்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இராணுவம் அல்லது மூத்த அரசு அதிகாரிகள் என்று காட்டிக் கொள்ளும் நபர்கள் இதுபோல் நடித்து முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் துருப்புகளின் நடமாட்டம் குறித்த விவரங்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக பாதுகாப்பு நிறுவனங்கள் அல்லது முக்கிய நிறுவல்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், தெரியாத அழைப்பாளர்களுடன் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்” என அவர் போர்ப் பதற்றத்தின்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.