ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று (7.5.2025) அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
'ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை நீடித்த இந்தத் தாக்குதலில், அதாவது 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை இந்திய ராணுவமும், விமானப் படையும் ஏவின. இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். பாகிஸ்தானியர்களின் உயிரை பறித்ததற்கு தக்க பதிலடி கொடுப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வீரர், பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதையடுத்து மேற்கொண்டு பாதிப்புகளை தடுக்க அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இது தவிர அருகிலுள்ள கிராம மக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்தோருக்கு அளிக்க ஜம்மு மருத்துவமனையில் ஏராளமானோர் குருதிக்கொடை வழங்கினர்