DOPING TEST PT WEB
இந்தியா

ஊக்கமருந்து பயன்பாடு| மோசமான விசயத்தில் ஹாட்ரிக் அடித்த இந்தியா.. 3 ஆண்டுகளாக முதலிடம்!

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, விளையாட்டு போட்டிகளின் பொழுது ஊக்கமருந்து எடுத்துக்கொள்ளும் வீரர்களை கொண்ட நாடாக இந்தியா முத்திரை பதித்துள்ளது.

PT WEB

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) வெளியிட்ட 2024ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

விளையாட்டு போட்டிகள் நடைபெறும்பொழுது, வீரர்கள் போட்டிகளில் செயல்திறனை அதிகரிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வெற்றிப்பெறுவதை தடுப்பதற்காக உலகளவில் "உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA)" அமைக்கப்பட்டது.

நியாயமான முறையில் விளையாட்டு நடைபெறுவதையும், திறமையான விளையாட்டு வீரர்கள் வாகை சூடுவதையும் உறுதி செய்திட WADA அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சர்வதேச மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறும் பொழுது போட்டிகளில் பங்குபெறும் வீரர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அவர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் எதையேனும் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யும்.

SPORTS

இந்த ஆய்வின் போது ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது உறுதிசெய்யப்பட்டிருந்தால் அவர்களை போட்டியில் இருந்து நீக்கவும். அவர்கள் போட்டியில் வெற்றிபெற்று பரிசுப்பெற்றிருந்தாலும், அவர்களது வெற்றியை ரத்து செய்யக்கோரியும், விளையாட்டை நடத்தும் அமைப்பிடம் பரிந்துரை செய்யலாம். இந்த அமைப்பின் பரிந்துரையின் பேரில் ஊக்கமருந்து எடுத்துக்கொண்ட விளையாட்டு வீரர் போட்டியிலிருந்து நீக்கம் செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிப்பதோடு அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்படும்.

இந்த WADA அமைப்பு கடந்த செவ்வாய்கிழமை அன்று 2024ஆம் ஆண்டிற்க்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. WADA அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024ஆம் ஆண்டு 260 இந்திய விளையாட்டு வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

drugs

கடந்தாண்டு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) அமைப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட 7,113 சோதனைகளில் 260 மாதிரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியவர்களின் பட்டியலில் 260 என்ற மூன்றிலக்க எண்ணைக்கொண்ட ஒரே நாடக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டிற்க்கான தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியவர்களின் பட்டியலிலும் 213 என்ற எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக WADA அமைப்பு வெளியிடும் ஆண்டறிக்கையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியவர்களின் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளது இந்தியா.

- ராஜ்குமார்.ர