அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சி தரப்பில் பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று அந்தந்த மாநில சட்டமன்ற வளாகங்களிலும் எம்.பி.க்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தேர்தலில் இரு வேட்பாளருக்குமான வெற்றி வாய்ப்புகள் என்ன... யாருக்கு எவ்வளவு ஆதரவு என்பதை இப்போது பார்க்கலாம். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதன்படி மக்களவையின் 543 பேரும் மாநிலங்களவையின் 245 பேரும் வாக்களிக்கலாம். அதாவது இத்தேர்தலில் 788 பேர் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள். ஆனால் இரு அவைகளிலும் சேர்த்து, 6 இடங்கள் காலியாக உள்ளதால் 782 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் சரிபாதிக்கு ஓரிடம் அதிகமாக, அதாவது 392 வாக்குகளை பெறக்கூடிய வேட்பாளர் வெற்றிபெறுவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, இரு அவைகளிலும் உள்ள 426 உறுப்பினர்களின் வாக்குகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்கும்.
i-n-d-i-a கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு இரு அவைகளிலும் சேர்த்து, 313 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இது தவிர, இரு பெரும் கூட்டணிகளில் இல்லாத கட்சிகளின் முடிவுகளும் கவனம் பெறுகிறது. 11 உறுப்பினர்களை கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளது. 12 உறுப்பினர்களை கொண்ட ஆம்ஆத்மி கட்சி i-n-d-i-a கூட்டணிக்கு ஆதரவளிக்க உள்ளது.
4 உறுப்பினர்களை கொண்ட BRS கட்சி தேர்தலையே புறக்கணிக்க உள்ளது. 7 உறுப்பினர்களை கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சியும் தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குறைந்தபட்சம் 437 வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு 325 வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதனால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.