இந்தியா- கனடா
இந்தியா- கனடா  முகநூல்
இந்தியா

கனடா உடனான உறவில் மேலும் விரிசல்.. 41 தூதர்களை திரும்ப அனுப்ப இந்தியா முடிவு?

Prakash J

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் (ஜூன் 18), கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா கனடா

மேலும், தூதரக அதிகாரிகள் வெளியேறியவுடன் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு நாட்டு அரசுகளும் இதுவரை வெளியிடவில்லை. தற்போது இந்தியாவுக்கு மொத்தம் 61 கனடா தூதர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையைக் குறைக்குமாறுதான் இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே மேலும் விரிசல் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவில் இருப்பது முக்கியம்’ எனத் தெரிவித்தாலும் இந்தியா அதுபோல் தெரிவித்திருப்பதாக எந்த அறிக்கையையும் அவர் உறுதிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் அவர், ‘தன்னுடைய அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்ந்து செயல்பட முயற்சிக்கும் எனவும், இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவைத் தொடர்வதில் முக்கியமான பணியை நாங்கள் செய்யப் போகிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னதாக, இந்திய தூதர்கள் பற்றி பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனடாவில் இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையின் சூழல் நிலவி வருகிறது. அச்சுறுத்தும் சூழல் இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அண்ணாமலை இல்லாத கூட்டம்: நிதியமைச்சரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?