Rising student suicide  AI
இந்தியா

ஒரே ஆண்டில் 14,488 மாணவர்கள் தற்கொலை.. NCRB அதிர்ச்சித் தகவல்! காரணம் என்ன?

நாட்டின் தற்கொலை எண்ணிக்கை சற்றே குறைந்திருந்தாலும், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 4.3% சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் 14,488 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தரவுகள் தெரிவித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் 13,892 தற்கொலைகள் பதிவாகியிருந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 2024 இல் 4.3% அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில், நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 2023 இல் 1,71,418-ஆக இருந்தது. 2024 இல் 170,746-ஆக குறைந்திருந்தபோதிலும், இந்த காலக்கட்டத்தில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளன என இந்த அறிக்கையின் தெரிய வந்திருக்கிறது.

மன அழுத்தம்

குறிப்பாக, 2020-ஆம் ஆண்டில் 153,052-ஆக இருந்த ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை. கடந்த 5 ஆண்டுகளில் 11.6% ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2015-ஆம் ஆண்டில் 133,623-ஆக இருந்த எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளில் 27.8% அதிகரித்துள்ளது.

அதேசமயம், மாணவர்களின் தற்கொலை விகிதம் இதைவிடவும் மிகத் தீவிரமான வேகத்தில் உயர்ந்துள்ளது என இந்த அறிக்கை சுட்டிகாட்டுகிறது. 2020-ஆம் ஆண்டில் 12,526-ஆக இருந்த மாணவர் தற்கொலைகள், ஐந்து ஆண்டுகளில் 15.7% உயர்ந்துள்ளன. 2015-ஆம் ஆண்டில் 8,934-ஆக இருந்த மாணவர் தற்கொலைகள் 10 ஆண்டுகளில் 62.2% அதிகரித்துள்ளன. 2015 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 1,15,850 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.

அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த தற்கொலைச் சம்பவங்களில், மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது.

Rising student suicides

மாணவர் தற்கொலைக்கான காரணங்கள்

கல்வி அழுத்தம், சிகிச்சையளிக்கப்படாத உளவியல் ரீதியான மன உளைச்சல் மற்றும் பலவீனமான ஆதரவு அமைப்புகள், மாணவர்களின் மனநல நெருக்கடி அதிகரித்து வருவதையே மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்களாக இந்த அறிக்கையில் சுட்டிகாட்டியிருக்கிறது.

அதேபோல, வலுவான ஆலோசனை அமைப்புகள், முன்கூட்டியே தலையிட்டு மாணவர்களுடன் பேசுதல், அரசு உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் மனநல ஆதரவை எளிதாக அணுகுதல் குறித்த ஆலோசனை ஆகியவற்றை கல்வி நிலையங்களில் மேம்படுத்தினால் மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவது குறையும் எனவும் மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.