இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வலையமைப்புகளில் ஒன்றாகும். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதுவரை இந்தியாவில் பெரும்பாலான ரயில்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதால், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
டீசல் ரயில்கள் கார்பன் டைஆக்சைடு வாயுக்களை வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் குறைக்கும் வகையில், டீசல் ரயில்களுக்கு மாற்றாக பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் சேவையை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் இயக்கப்படுகிறது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலை பயணிகள் பயன்பாட்டிற்க்காக பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார்.
பொதுவாக ரயில்கள் டீசல் அல்லது மின்சாரத்தில் இயங்குகின்றன. ஆனால் ஹைட்ரஜன் ரயிலில், ஹைட்ரஜன் எரிபொருள் நேரடியாக எரிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல் (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த எரிபொருள் செல்லில், ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்சிஜனும் வினைபுரிந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரத்தின் மூலமாகவே ரயில் இயங்குகிறது. இந்த செயல்முறையில் கார்பன் டைஆக்சைடு வெளியேறாது. நீராவி மற்றும் தண்ணீர் மட்டுமே வெளியேறுவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.
இந்த ஹைட்ரஜன் ரயிலின் மற்றொரு முக்கிய சிறப்பு என்னவென்றால், இதை இயக்குவதற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே உள்ள டீசல் வழித்தடங்களிலேயே இயக்க முடியும். மேலும், மின்மயமாக்கல் செய்யப்படாத மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர வழித்தடங்களிலும் இந்த ரயிலை இயக்க முடியும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்த திட்டத்திற்கு சில சவால்களும் உள்ளன. ஹைட்ரஜன் உற்பத்திக்கான செலவு அதிகமாக இருப்பது, பாதுகாப்பாக சேமித்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம், நாடு முழுவதும் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களை அமைக்க வேண்டியது போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன.
மேலும், ஹைட்ரஜன் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டது என்பதால், அதைக் கையாள அதிக பாதுகாப்பு நடைமுறைகள் அவசியமாகின்றன. திரவ ஹைட்ரஜனாக சேமிக்க மிகவும் குறைந்த வெப்பநிலை தேவைப்படுவதாலும், அதற்கான சிறப்பு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது.
தற்போது இது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், இந்திய ரயில்வேயின் பசுமை போக்குவரத்து இலக்கில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். மேலும், எதிர்காலத்தில் நாட்டின் பிற வழித்தடங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.