model image chatgpt
இந்தியா

அதானிக்காக களமிறங்கும் மத்திய அரசு.. இண்டிகோ, ஏர் இந்தியா ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

ஒருவேளை, இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டால், உள்கட்டமைப்புத் துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் நேரடியாக விமானச் சேவையில் காலடி எடுத்து வைக்க முடியும்.

Prakash J

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அதானி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்களுக்கு புதிய விமான நிறுவன சேவைகளை வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நமது நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் விமானச் சேவையும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இண்டிகோ (IndiGo) மற்றும் ஏர் இந்தியா (Air India) ஆகிய இரு நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ஏர் இந்தியா விமானங்களில் அவ்வப்போது ஏற்படும் அசெளர்யங்களுக்கு மத்தியில், 60%க்கும் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் செல்லும் இண்டிகோ நிறுவனம், விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்தது. இதனால் உலகம் முழுவதும் பல பயணிகள் பாதிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில்தான் புதிய விமான நிறுவன சேவையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

indian flights

2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ப்ளும்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேசமயம், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA), 2024-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்காக, 2044-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மேலும் 42.5 கோடி அதிகரிக்கும் எனக் கணக்கிடுகிறது. இந்த அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, விமான நிறுவனங்களுக்கு இடையேயான கடுமையான போட்டி முக்கியமானது என்று அரசாங்கம் நம்புவதாலேயே, புதிய விமான நிறுவனச் சேவைகளைத் தொடங்க ஆலோசித்து வருகிறது. மேலும், ஜெட் ஏர்வேஸ் (Jet Airways), கோ ஃபர்ஸ்ட் (Go First) ஆகிய நிறுவனங்களின் வீழ்ச்சி மற்றும் விஸ்தாரா, ஏர்ஆசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியாவுடன் இணைந்தது போன்றவற்றால், இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் சுமார் 90% பங்கினை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா மட்டுமே கொண்டுள்ளன.

இதையும் படிக்க: உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் | கடுமையான புதிய விதிகளை அமல்படுத்திய பிசிசிஐ!

இந்த இரட்டை ஆதிக்கத்தால் விமானக் கட்டண உயர்வு, மற்றும் ஒரே நிறுவனம் சேவை ரத்து செய்யும்போது பயணிகளுக்கு மாற்று வழிகள் இல்லாத நிலை ஆகியவை உருவாகின்றன. இதைக் கருத்தில்கொண்டு மேலும் புதிய சேவையை உருவாக்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய விதிமுறைகளின்படி, டெல்லி அல்லது மும்பை போன்ற விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள் எந்தவொரு விமானச் சேவை நிறுவனத்திலும் (Airline) 10%-க்கு மேல் பங்குகளை வைத்திருக்க முடியாது. இந்த 10% வரம்பைத் தளர்த்தி, விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களே சொந்தமாக விமானச் சேவைகளையும் தொடங்க அனுமதிக்கலாம் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

அத்தகைய எந்தவொரு நடவடிக்கைக்கும் சட்ட அமைச்சகத்திடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவைப்படும். ஒருவேளை, இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டால், உள்கட்டமைப்புத் துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் நேரடியாக விமானச் சேவையில் காலடி எடுத்து வைக்க முடியும்.

அதன்படி, மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட 8 விமான நிலையங்களை நிர்வகிக்கும் அதானி குழுமம், சொந்தமாக புதிய விமான நிறுவனத்தைத் தொடங்க வழிவகுக்கும். அதேபோல், டெல்லி சர்வதேச விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களை இயக்கி வரும் ஜி.எம்.ஆர் குழுமமும் இதில் களமிறங்க முடியும். தவிர, புதிய நிறுவனங்கள் வந்தால், பயணிகளுக்குக் கூடுதல் தேர்வுகள் கிடைக்கும். தவிர, அதிகப் போட்டியால் விமானக் கட்டணங்கள் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. மேலும், விமான நிலையத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனமே விமானத்தையும் இயக்கினால், தங்களது சொந்த விமானங்களுக்குச் சாதகமான 'லேண்டிங்/டேக்-ஆஃப் ஸ்லாட்டுகளை' ஒதுக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.

model image

இருப்பினும், விமான நிலையத்தை நிர்வகிக்கப்பவர்களே விமான நிறுவனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள அனுமதிப்பது, நியாயமான போட்டி குறித்த கவலைகளையும் எழுப்பக்கூடும் எனவும், முக்கியமான தரையிறங்கும் மற்றும் புறப்படும் நேரங்களை ஒதுக்குவது போன்றவற்றில் தங்கள் சொந்த விமான நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதாகக் குற்றம்சாட்டப்படலாம் எனவும், இது போட்டி விமான நிறுவனங்களுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக, விதிகள் தளர்த்தப்பட்டாலும், உலகளாவிய விமானப் பற்றாக்குறையின் காரணமாக புதிய விமான நிறுவனங்கள் விரைவாக விரிவடைவதில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க: உருவாகப்போகும் புதிய தேசம்.. நாலாபுறமும் நெருக்கடி.. PAK-க்கு சுத்துபோட்ட 4 பிரிவினர்!