கச்சா எண்ணெய் புதிய தலைமுறை
இந்தியா

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் டிசம்பர் முதல் குறைப்பா? இந்தியாவின் முடிவு என்ன?

இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 50% ஆக உயர்த்தி, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்திற்கான இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் ஆர்டர்கள் குறைக்கப்பட்டுள்ளன.

திவ்யா தங்கராஜ்

இந்தியாவின் ஐந்து பெரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அடுத்த மாதத்திற்கான ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான ஆர்டர்களைவழங்காமல் இருக்கிறது. வழக்கமாக, அடுத்த மாதத்திற்கான எண்ணெய் ஆர்டர்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். ஆனால் தற்போதுவரை அது செய்யப்படாமல் இருக்கிறது . இதன்மூலம் டிசம்பர் மாத விநியோகத்திற்காக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

crude oil

குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஹெச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்திருக்கின்றன. தற்போது, ​​இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் நயாரா எனர்ஜி லிமிடெட் மட்டுமே டிசம்பர் மாதத்திற்கான ரஷ்ய கச்சா எண்ணெயைப் பெற்றுள்ளன.

மேலும், இந்திய அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் பாரசீக வளைகுடாவில் உள்ள பாரம்பரிய சப்ளையர்களை அணுகியுள்ளன. சவுதி அரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) நிர்வாகிகள் கடந்த வாரம் அபுதாபியில் நடந்த எரிசக்தி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய அதிகாரிகளைச் சந்தித்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து விநியோகங்களை உறுதி செய்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சா எண்ணெய்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா பெருமளவில் குறைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். இதனை தொடர்ந்து அமெரிக்கா விரைவில் இந்தியப் பொருட்களுக்கான வரிகளைக் குறைக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.