power cut  ANI
இந்தியா

இந்தியாவில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் பற்றாக்குறை.. தமிழகத்துக்கும் Shock!

மாநிலங்கள் நீண்ட கோடைக்காலத்தை எதிர்பார்க்காததால் முன்கூட்டியே போதுமான மின்சாரத்தை வாங்கி வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது மின்சார சந்தையில் வாங்கும் விலையும் அதிகரித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

இந்தியாவில் மின் பற்றாக்குறை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மின் தேவை அதிகமாக இருக்கும் இரவு நேரங்களில் விநியோகத்தைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டுள்ளன.

coal power plant

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மின் பற்றாக்குறை 560 மில்லியன் கிலோவாட் - மணி நேரம் (million kilowatt-hours (kWh) ஆக இருந்தது. இது 2023 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும். நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் பிற துறைகளில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியில் ஏற்பட்ட சில பிரச்னைகள் மின் தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், நீர்மின் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. எல் நினோ காரணமாக மழைப்பொழிவு குறைந்ததால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாட்டில் சுமார் 41 GW திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இதில் பல நிலக்கரி மின் நிலையங்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. காற்றாலை மற்றும் நீர்மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் மின் தேவையைச் சமாளிப்பது சவாலாகியுள்ளது.

hydro power plant

மற்றொரு முக்கியப் பிரச்னை பேட்டரி சேமிப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லாதது. பகல் நேரத்தில் சூரிய மின்சார உற்பத்தி அதிகமாக இருந்தாலும், அந்த மின்சாரத்தைச் சேமித்து இரவு நேரத்தில் பயன்படுத்த போதுமான பேட்டரி வசதிகள் இல்லை. இதனால் பகலில் கிடைக்கும் கூடுதல் சூரிய மின்சாரத்தை இரவு நேர தேவைக்குப் பயன்படுத்த முடியவில்லை.

மத்திய அரசிடம், பொதுவாக மின் பற்றாக்குறை ஏற்படும்போது மாநிலங்களுக்கு வழங்குவதற்காக 14 முதல் 15 GW வரை மின்சாரம் இருக்கும். ஆனால், தற்போது அதில் பெரும்பகுதி ஏற்கெனவே பெரும்பாலான மாநிலங்களுக்குப் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளதால், கூடுதல் மின்சாரம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஞ்சாபின் சில பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் ஒருநாளைக்கு 14 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மாநிலத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்கியுள்ளது.

Solar power

மேலும், மாநிலங்கள் நீண்ட கோடைக்காலத்தை எதிர்பார்க்காததால் முன்கூட்டியே போதுமான மின்சாரத்தை வாங்கி வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது மின்சார சந்தையில் வாங்கும் விலையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், பகலில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தைச் சேமித்து இரவு நேரத்தில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி சேமிப்புத் திட்டங்களை வேகப்படுத்துமாறு மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது.

மொத்தத்தில், இந்தியாவின் மின் உற்பத்தி திறன் அதிகரித்தாலும், இரவு நேர தேவையைச் சமாளிக்கப் போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாதது தற்போது முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது.