தென்மேற்குப் பருவமழை நிறைவடைய உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இந்தியாவில் நிலவி வரும் 'எல் நினோ' தாக்கத்தால் பருவமழை குறைந்திருப்பதுடன், வறண்ட வானிலையும் நிலவி வருகிறது. இந்நிலையில் தான், நாட்டில் 5 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், நாடு முழுவதும் இயல்பை விட சுமார் 12.3 சதவீதம் குறைவான மழைப்பொழிவே பதிவானது. இதன் காரணமாக, காரீஃப் எனப்படும் கோடைக்காலப் பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பும் சுமார் 1 சதவீதம் குறைந்துள்ளது. இந்த மழைப்பற்றாக்குறைக்கு, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் அசாதாரண வெப்பநிலை உயர்வான எல் நினோ, முக்கியக் காரணாமாக கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், டெல்லியில், செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரபி பருவ சாகுபடி மாநாடு (Rabi Campaign 2026) நடைபெற்றது. வரவுள்ள குளிர்கால சாகுபடி, நீர்மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அந்தத் துறையின் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டு, நாட்டின் வேளாண்மை நிலவரம் மற்றும் அடுத்தகட்ட சாகுபடிக்கான நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
அப்போது, எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதிகள், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளார். மேலும், நாட்டின் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு குறித்து விரைவில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த வறட்சியால் 6 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம், வறட்சி நிலவினாலும் வரவிருக்கும் ரபி பருவ காலத்தில் விவசாயிகள் சாகுபடியைத் தொடர மத்திய அரசு ஆதரவளிக்கும் எனவும் விவசாய நிலங்கள் தரிசாகக் கிடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் உடனடி நோக்கம் எனவும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் உறுதியளித்தார்.
அதேசமயம், எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது என அனைத்துலகக் காலநிலைச் சமிக்ஞை (International Climate Signal) சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. எனினும், மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன.