இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு Pt web
இந்தியா

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை தொடக்கம்.. கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன.? முழு விபரம்.!

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டம் நாளை முதல் நாடெங்கும் தொடங்குகிறது.

PT WEB

இந்தியாவில் இதுவரை 15 மக்கள்தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. இதில் சுதந்திரத்திற்கு பிறகு மட்டும் 7 கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. 5 ஆண்டு தாமதத்திற்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்தமுறை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள்தொகை 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977ஆக இருந்தது.140 கோடிக்கு மேற்பட்டோரின் விவரங்களை சேகரிப்பதால் உலகின் மாபெரும் கணக்கெடுப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.

representational image

மொபைல் செயலி மூலம் பதிவு : இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் தரவுகள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்யப்படும். பொதுமக்களே நேரடியாக வலைத்தளம் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவிடலாம். இக்கணக்கெடுப்பில் பெயர், வயது, வீடு, பொருட்கள் உள்ளிட்டவை தவிர சாதி குறித்த விவரங்களும் கேட்கப்பட உள்ளது. 2027 பிப்ரவரியில் 2ஆம் கட்ட கணக்கெடுப்பு நடைபெறும். இதன்பின் 2027 மார்ச் ஒன்றாம் தேதி மக்கள்தொகை விவரம் அறிவிக்கப்படும். இதில் தெரியவரும் தகவல்களை வைத்தே நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி சீரமைப்பு, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2 பிரிவாக நடைபெறும். இதில் முதல் பிரிவில் மக்கள் தங்களை பற்றிய விவரங்களை அரசு இணையதளத்தில் தாங்களே பதிவு செய்யலாம். இதற்காக தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுய விவரங்களை பதிவு செய்வோருக்கு 16 இலக்க எண் தரப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு நேரடியாக வரும்போது இந்த எண்ணை வழங்கவேண்டும்.

அதே நேரம் ஆதார் உட்பட எந்த ஆவணங்களையும் வழங்கத்தேவையில்லை. பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் ரகசியத்தன்மை காக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் 2ஆவது கட்ட கணக்கெடுப்பின்போது சாதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கூறவேண்டியிருக்கும்

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கோப்புப்படம்

கணக்கெடுப்பின் போது உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்பட்ட கட்டடத்தின் எண் அல்லது வீட்டு எண் முதலாவது கேள்வியாக இருக்கும். வீட்டின் தரையின் வகை, எந்தப்பொருளால் சுவர் கட்டப்பட்டது, கூரை எந்தப்பொருளால் ஆனது ஆகிய கேள்விகளும் கேட்கப்படும். கட்டடம் குடியிருப்பு நோக்கில் பயன்படுகிறதா அல்லது வணிக நோக்கில் பயன்படுகிறதா, வீட்டின் ஒட்டுமொத்த நிலை ஆகிய தகவல்களையும் தரவேண்டியிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, வயது, பாலினம் ஆகிய விவரங்களை தரவேண்டியிருக்கும்

வீட்டின் தலைவர் பட்டியலினத்தவரா என்ற விவரத்தையும் அளிக்கவேண்டும். வீட்டின் உரிமை யார் பெயரில் உள்ளது, வீட்டிலுள்ள அறைகள், மின்சார வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் ஆதாரம், சமையல் எரிபொருள் விவரம் ஆகிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்கப்படும். ரேடியோ, டிவி, கணினி, தொலைபேசி, இணைய வசதி உள்ளிட்டவை இருக்கிறதா என்பது குறித்து தெரிவிக்கவேண்டும்.

மொபெட், பைக், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்கள் குறித்த விவரமும் கேட்கப்படுகிறது. தினசரி உணவுக்கான பிரதான தானியம் எது என்பதையும் கூற வேண்டியிருக்கும். இறுதியாக செல்போன் எண்ணையும் தரவேண்டியிருக்கும். இதில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில்தான் குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அரசின் கொள்கைகளும் வளர்ச்சித் திட்டங்களும் வகுக்கப்படும்