அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, இரு நாள் விவாதம் நடந்தது. அப்படி நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் முடிவில், மாநிலங்களவையில் அமித் ஷா உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர், “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் நேற்று முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கர் புகைப்படத்துடன் போராட்டமும் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று “ஜெய்பீம்! ஜெய்பீம்” என முழக்கமிட்டனர். மேலும், “மத்திய அமைச்சர் அமித்ஷாவே! மன்னிப்பு கேளுங்கள்” எனவும் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.