வேட்புமனுத் தாக்கல் எக்ஸ் தளம்
இந்தியா

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்.. INDIA கூட்டணி வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

INDIA கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Prakash J

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும் சி.பி.ராதாகிருஷ்ணனும் INDIA கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியும் களமிறக்கப்பட்டுள்ளனர். இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனும் INDIA கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல்

இதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், INDIA கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) சஞ்சய் ராவத் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

தேர்வு செய்வது எப்படி?

துணைக் குடியரசுத் தலைவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். காலியிடங்களைத் தவிர்த்து (மக்களவை 1, மாநிலங்களவை 5), தற்போதைய இரு அவைகளிலும் 782 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மக்களவையில் 542 இடங்களும் மாநிலங்களவையில் 240 இடங்களும் உள்ளன. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 இடங்களும், மாநிலங்களவையில் 130 இடங்களும் உள்ளன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு மக்களவையில் 249 இடங்களும் மாநிலங்களவையில் 110 இடங்களும் உள்ளன.

வேட்புமனுத் தாக்கல்

இதில் 392 வாக்குகளைப் பெறுபவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார். எனினும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைவிட ஆளும் பாஜ கூட்டணியே, கணிசமான அளவில் உறுப்பினர்களை வைத்திருப்பதால் எதிர்க்கட்சிகள் நிறுத்திய வேட்பாளரைவிட, சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், ஏற்கெனவே அந்தக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.