இந்திய கூட்டணி சார்பில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிபிஆருக்கு எதிராக களமிறங்கும் இவர், அரசியல் பின்னணி இல்லாதவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அவரை தேர்வு செய்துள்ளன. இதனால், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. இது, தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. எனினும், INDIA கூட்டணி சார்பிலும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுகவின் திருச்சி சிவா, காங்கிரஸைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால் அந்தப் பின்னணி அல்லாத ஒருவரை நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அந்த வகையில், இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையைக் களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அதேநேரத்தில், தமிழருக்கு எதிராக இன்னொரு தமிழரை இறக்க கூட்டணிக் கட்சிகள் சில விரும்பவில்லை. எனினும், அவரது பெயர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21ஆம் தேதி கடைசி நாள் என்பதால் INDIA கூட்டணி இன்றே தனது முடிவை அறிவித்துள்ளது. இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணனை ஒட்டுமொத்தமாகத் தேர்வு செய்வதற்கு பாஜக, எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
1946ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்த சுதர்சன ரெட்டி, பி.ஏ., எல்.எல்.பி முடித்து 1971இல் ஹைதராபாத்தில் ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் விவகாரங்களில் பயிற்சி பெற்றுள்ளார். 1988-90ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1990ஆம் ஆண்டு 6 மாதங்கள் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார். 1995 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2005 அன்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்து 2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
துணை குடியரசுத் தலைவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். காலியிடங்களைத் தவிர்த்து (மக்களவை 1, மாநிலங்களவை 5), தற்போதைய இரு அவைகளிலும் 782 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 இடங்களும், மாநிலங்களவையில் 133 இடங்களும் உள்ளன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு மக்களவையில் 249 இடங்கள் உள்ளன. இதில் 392 வாக்குகளைப் பெறுபவர் தேர்வு செய்யப்படுவார். இப்படி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைவிட ஆளும் பாஜ கூட்டணியே, கணிசமான அளவில் உறுப்பினர்களை வைத்திருப்பதால் எதிர்க்கட்சிகள் நிறுத்திய வேட்பாளரைவிட, சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதில், ஏற்கெனவே அந்தக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன.