குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த விமான விபத்து தொடர்பாக புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தியது. அதன்படி, இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. ’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இரண்டு விமானிகள் பேசிய விமானத்தின் காக்பிட்டில் இருந்த குரல் பதிவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பலதரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதாவது, இந்த விபத்துக்குக் காரணமாக விமானி இருந்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு விமான வல்லுநர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை கேப்டன் அணைத்ததாகச் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது. அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்குழுவில் இருந்த அமெரிக்க நிபுணர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
விபத்துக்கு சில நொடிகள் முன் எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்த இணை பைலட் ஏன் ஸ்விட்சை அணைத்தீர்கள் என கேட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பைலட் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்திற்கு பைலட் சுமீத் சபர்வால் காரணம் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரைக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அறிக்கை சரிபார்க்கப்படாதது. இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும். ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பெறவே சோதனை நடைபெற்றுள்ளது.
இந்தச் சோதனை இன்னும் முழுமையடையவில்லை. சர்வதேச ஊடகங்கள் சில, சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதும், குறிப்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றவைகளாகும். இந்திய விமான விபத்து புலனாய்வு பிரிவின் நேர்மையை குறைத்து மதிப்பிட்டு, கட்டுக் கதைகள் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானிகள் சங்கமான இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP), வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையை கண்டித்து, விமானியைக் குறை கூற முயற்சிப்பதாகக் அறிக்கை மீது குற்றம்சாட்டியுள்ளது. AAIBஇன் முதற்கட்ட விசாரணை அறிக்கை எந்த விமானியையும் குறை கூறவில்லை என்பதையும் FIP சுட்டிக்காட்டியுள்ளது.