செய்தியாளர் - M. மீரா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 8ஆம் தேதி பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாகக் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதாகக் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அமெரிக்கத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, வெளிநாட்டுக் கொத்தடிமைத் தொழிலாளர்களை நியமிக்க முடியாது என்று தெரிவித்தார். அப்போது அவர் பயன்படுத்திய வெளிநாட்டு ஒப்பந்த அடிமைகள் ‘(Foreign indentured servants) ’ என்ற வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தச் சொற்கள் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பையும் திறமையையும் அவமதிப்பதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் வரலாறே பல தலைமுறைகளாக அங்கு குடியேறிய மக்களால் உருவாக்கப்பட்டது என்றும், அவர்களின் உழைப்பு, தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அடிமைத்தனம் மற்றும் காலனித்துவ வரலாற்றின் வலியை நினைவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது கடுமையாகப் புண்படுத்தக்கூடியது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் திறமையான தொழிலாளர்கள் இரு நாடுகளுக்கும் பயனளிப்பதாகவும், இந்தியர்கள் அமெரிக்காவில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தித்திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
எனவே, அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு உதவாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கத் தொழிலாளர் துறை, எட்டு நிறுவனங்களுக்கான PERM எனப்படும் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. PERM என்பது அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு நடைமுறையில் முக்கியமான ஒரு கட்டமாகும்.
புதிய விண்ணப்பங்களையும் ஏற்கவில்லை. இந்தப் பட்டியலில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், காக்னிசன்ட், கேப்ஜெமினி, மைக்ரோசாஃப்ட் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த முடிவால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஹெச்-1பி விசாக்கள் தானாகவே செல்லாதது ஆகாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களின் கிரீன் கார்டு பெறும் நடைமுறையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.