செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு பாரம்பரியமிக்க சத்திரம் - புல்லுமேடு கானகப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6,598 பேர் பயணம் செய்துள்ளனர். பிரசித்தி பெற்ற சபரிமலையில் 2025 ஜனவரி 19ம் தேதி வரை நீண்டிருக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் துவங்கியுள்ளது.
இதற்காக கடந்த 16ம் தேதி தேக்கடி பெரியாறு புலிகள காப்பகத்தின் பாரம்பரியமிக்க சத்திரம் - புல்லுமேடு கானகப்பாதை திறக்கப்பட்டது. சத்திரத்தில் இருந்து புல்லுமேடு, பாண்டித்தாவளம் வழியாக சபரிமலை வரை 12 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த பாரம்பரிய கானகப் பாதையில் துவக்க நாளில் இருந்தே பக்தர்கள் பாத யாத்திரையாக செல்ல துவங்கினர்.
தினமும் சராசரியாக 300 பேர் கடந்து சென்ற கானக பாதையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த கானக பாதையில் 6,598 பேர் பயணம் செய்துள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து, பம்பையை போலவே சத்திரத்திலும் "ஸ்பாட் புக்கிங்" வசதி செய்யப்படுள்ளது.
வனத்துறை சார்பில் வழி நெடுகிலும் பக்தர்களுக்கான குடிநீர், அவசர மருத்துவ சேவைகள் செய்யப்படுள்ளன. சத்திரத்தில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை ஐயப்ப பக்தர்கள் கானக பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வன விலங்குகளில் இருந்து பத்தர்களை பாதுகாக்கும் தேக்கடி பெரியாறு காப்பகத்தின் கண்காணிப்பு பணிகளும் தொடர்கிறது.