ஒசூர்: சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கடந்த சில தினங்களாக கர்நாடக மாநில வனப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் தனித் தனி குழுக்களாக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வனப் பகுதிகளிலும் முகாமிட்டு வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன.
யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதியை விட்டு வெளியேறாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு வனத்துறையினர் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பிரத்தியேகமாக ட்ரோன் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் வனப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு, ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்க்கம் காப்புகாட்டிலிருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப் பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. எனவே, சினிகிரிபள்ளி, அனுமந்தபுரம், கொத்தப்பள்ளி, கொம்மேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை மேய்யப்பவர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.