2023ஆம் ஆண்டுக்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பக தரவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. மாநிலங்களிலும் ஒன்றியப் பிரதேசங்களிலும் உள்ள காவல் நிலையங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் தரவுகள் தொகுக்கப்பட்டதால், இது நாட்டின் மொத்த குற்ற விகிதங்களை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பதிவாகியுள்ளன. அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 4,48,211 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2022இல் 4,45,256 வழக்குகளாகவும், 2021இல் 4,28,278 வழக்குகளாகவும் இருந்துள்ளன. அதன்படி பார்த்தால், குற்றச்சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டு அதிகரித்திருக்கின்றன.
2023ஆம் ஆண்டில் பெண் மக்கள்தொகை மதிப்பீடுகளின் அடிப்படையில், ஒரு லட்சம் பெண்களுக்கு 66.2 குற்றச் சம்பவங்கள் தேசிய அளவில் நடப்பதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
மாநிலங்களைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 66,381 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 47,101 வழக்குகளும், ராஜஸ்தானில் 45,450 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 34,691 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 32,342 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக 2022இல் 9,207இல் இருந்து 2023இல் 8,943 ஆகக் குறைந்துள்ளன.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498Aஇன்கீழ் கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் தொடர்பாக அதிகபட்சமாக 1,33,676 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், பெண்களைக் கடத்துதல் தொடர்பாக நடந்த குற்றங்களுக்கு 88,605 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ், 2023ஆம் ஆண்டில் 66,200 வழக்குகளும், 29,670 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022இல் 6,580 ஆக இருந்த நிலையில், அது 2023இல் 6,968ஆக உயர்ந்துள்ளது.
வரதட்சணை தொடர்பான குற்றங்களின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2023ஆம் ஆண்டில் 14% அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வரதட்சனை கொடுமை ஆண்டு முழுவதும் 6,100க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில் வரதட்சணை தடைச் சட்டத்தின்கீழ் 15,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இது 2022இல் 13,479 ஆகவும், 2021இல் 13,568 ஆகவும் இருந்தது.
இந்தச் சட்டத்தின்கீழ் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 7,151 வழக்குகளும், அதைத் தொடர்ந்து பீகாரில் 3,665 வழக்குகளும் மற்றும் கர்நாடகாவில் 2,322 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கம், கோவா, அருணாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட பதின்மூன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரதட்சணை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
2023ஆம் ஆண்டில் நாட்டில் 207 அமிலத் தாக்குதல்கள் பதிவாகியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் ஐபிசி பிரிவு 326Aஇன்கீழ் 57 அமிலத் தாக்குதல்கள் நடந்துள்ளன. தரவுகளின்படி, நாட்டின் மொத்த அமிலத் தாக்குதல்களில் மேற்கு வங்கத்தில் மட்டும் 27.5% சம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான மேற்கு வங்கம், 2018 முதல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அமிலத் தாக்குதல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகள் அதிகளவில் ஒடிசாவில் பதிவாகியுள்ளன. அங்கு,1,978 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 1,750 வழக்குகள் பதிவாகியுள்ளன.