தமிழ்நாட்டில் கோவில் பூசாரிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஆலயங்கள் மற்றும் குருத்துவாராக்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்காக பூசாரிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியை செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சி சார்பாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார். டெல்லி ஐ எஸ் பி டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றுக்கு சென்ற கேஜ்ரிவால், அங்குள்ள பூசாரிகளின் விவரங்களை பெற்று, இதற்கான ஆம் ஆத்மி கட்சியின் விவரங்களை பதிவு செய்யும் பணியை தொடங்கினார்.
பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என அவர் திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, பூசாரிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. ஏற்கனவே மகளிருக்கு உதவித்தொகை என அறிவிப்பு வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பாக முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உதவித்தொகை பெற தகுதி பெற்ற மகளிரின் பெயர்களை பதிவு செய்யும் பணியை நடத்தி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதலில் மகளிர் உதவித்தொகை தொடர்பாக வாக்குறுதிகள் அளித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், ஆலயங்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தளங்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அடுத்த வாக்குறுதி அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் இந்த நடவடிக்கை சர்ச்சையை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, மகளிர் உதவித்தொகை தொடர்பாக மகளிர் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. மாநில அரசுதான் பயனாளர்களை பதிவு செய்ய முடியுமே தவிர, ஒரு அரசியல் கட்சி எப்படி பயனாளர்களின் விவரங்களை பெற முடியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீக்ஷித் புகார் அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளது.
சந்தீப் தீக்ஷித் மற்றும் அவரைப் போலவே இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் அஜய் மாக்கன் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவைகளாக செயல்பட்டு வருகின்றனர் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இந்த இருவர் மீது காங்கிரஸ் கட்சியின் தலைமை நடவடிக்க எடுக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியை "INDIA" கூட்டணியிலிருந்து நீக்க ஆம் ஆத்மி கட்சி பிற கூட்டணி கட்சிகளிலும் கோரிக்கை வைக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மற்றும் டெல்லி முதல்வர் ஆதிசி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உதவி திட்டங்களுக்கு பதிவு செய்வதாக பயனர்களின் விவரங்களை பெற்று, ஆம் ஆத்மி கட்சி அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து வருவதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வாக்காளர்களில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்க பாஜக முயற்சி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி பதில் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இப்படிப்பட்ட சர்ச்சையான சூழலில் ஆலயங்கள் மற்றும் சீக்கிய குருதுவாராக்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு உதவித்தொகை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளது. குருதுவாராக்களில் பூஜை பணிகளை மேற்கொள்வோர் கிராந்தி என அழைக்கப்படுகின்றனர். ஆகவே ஆம் ஆத்மி கட்சி தனது வாக்குறுதியில் "பூஜாரி-கிராந்தி உதவித்தொகை திட்டம்" தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
ஏற்கெனவே, இதே போல உதவி திட்டம் 10 வருடங்களாக மசூதிகளில் பணி புரியும் மௌலானாக்களுக்கு வழங்கப்படுகிறது எனவும் இத்தனை நாட்களாக அரவிந்த் கேஜ்ரிவால் ஆலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களில் பணிபுரிவோரை மறந்துவிட்டார் எனவும் பாஜக மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய வார்த்தை போர்களால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் சர்ச்சையாகி வருகின்றன.