ஊர்வலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் pt web
இந்தியா

உத்தரப்பிரேதசம் | “திருமண ஊர்வலத்தில் டிஜே இசையா?” பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..

மீரட்டில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது திருமண ஊர்வலத்தில் டிஜே இசை சத்தமாக இசைக்கப்பட்டதற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கேஷ்வர்

மீரட்டில் புலந்த்ஷாஹர் அருகே தாம்ராவலி கிராமத்தைச் சேர்ந்தவர் பகவத் சிங். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரது திருமண ஊர்வலம் கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. திருமண ஊர்வலத்தில் டிஜே இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமண ஊர்வலம் உயர்சாதி எனக் கூறிக்கொள்ளும் தாக்கூர் மக்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்றுள்ளது. இதற்கு அந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது வாக்குவாதமாக மாறிய நிலையில், ஊர்வலத்தை நடத்திவந்த பட்டியல் சமூக மக்கள் மீது கிட்டத்தட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த 40 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சாதிய அவதூறுகளைக் கூறி நடத்தப்பட்டத் தாக்குதலில் இரும்புக் கம்பிகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊர்வலம் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குதிரையில் வந்த மணமகனை வலுக்கட்டாயமாக இறக்கி அவரைத் தாக்கிய நிலையில், அவரை தரையிலும் இழுத்துச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் என்பவர் கூறுகையில், “வியாழக் கிழமை இரவு 8 மணியளவில், டிஜே இசையுடன் திருமண ஊர்வலம் வந்ததை எதிர்த்து ஊர்வலத்தை 30-40 உயர்சாதி ஆண்கள் தடுத்து நிறுத்தினர். குதிரையில் வந்த மணமகனை கீழே இழுத்து கண்மூடித்தனமாக தாக்கி இழுத்துச் சென்றனர். தாக்குதலில் 6 பெண்கள் காயமடைந்தனர். ஊர்வலம் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டு ‘மீண்டும் இவ்வழியாக வரக்கூடாது’ என மிரட்டி அனுப்பினர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கோட்வாலி (கிராமப்புற) காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், ஊர்வலத்தில் சத்தமாக இசையை இசைத்ததன் காரணமாக ஏற்பட்ட சண்டை எனத் தெரிகிறது. ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அந்நபர்கள் மீது BNS பிரிவுகள் 191 (2), 126 (2), 324 (4), 115 (2), 352 மற்றும் SC/ST சட்டப்பிரிவுகள் 3(1) (b) (c) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த மக்கள் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பாஜக எம்பி போலா சிங் தலையிடும் வரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. எம்பி போலா சிங் பாஜகவின் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், “இது துரதிர்ஷ்டவசமான சம்பவம். சாதிய சார்பை வெளிப்படுத்தியவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேறொருவர் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி புலந்த்ஷாஹரின் ஜஹாங்கிராபாத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டேபிளின் ஊர்வலம் ஒன்றும் இதுபோல் தடுத்து நிறுத்தப்பட்டு, ஊர்வலத்தின் மேல் தாக்குத்தல் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.