வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை.. தமிழ்நாடு எத்தனையாவது இடம்?
வாரத்திற்கு 70 மணி நேரம் பணி என வேலை நேரம் குறித்து தொழில் துறையினர் சமீபகாலமாக கருத்துகளை பகிர்ந்து வருவது பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக, இந்தியாவை நம்பர் ஒன் நாடாக மெம்படுத்த வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். அதேபோல, ஊழியர்கள் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டும் என எல்&டி தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பல்வேறு துறைகள், சமூக பின்னணி, பாலினம் வாரியாக வேலை நேரம் குறித்த தரவுகளை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட நேரப் பயன்பாடு ஆய்வு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரம் 3 நிமிடங்கள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டில் 7 மணி நேரம் 27 நிமிடங்களாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அரசு நிறுவனங்களை விட தனியார் நிறுவனங்களில் கூடுதல் மணி நேரம் பணியாற்றுவது தெரியவந்திருக்கிறது.
வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணி செய்பவர்கள் எண்ணிக்கையில் குஜராத் மாநிலத்தில் 7.21 சதவிகிதம் பேர் உள்ளதாகவும், பஞ்சாப்பில் 7.09 சதவிகிதம் பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 6.61 சதவிகிதம் பேர் 70 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணிபுரிகின்றனர். மேற்கு வங்கத்தில் 6.19 சதவிகிதம் பேரும், கேரளாவில் 6.16 சதவிகித்தினரும், தமிழ்நாட்டில் 4.74 சதவிகிதம் பேர்களும் 70 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணி புரிவது தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்ப்பது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என 2024-25ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் செலவிடுவது மன உளைச்சலை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கதக்கது.