குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனினும், இம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தின் அகமதாபாத்தில் மட்டும் 4,38,047 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. அகமதாபாத் நகரில் மட்டும் 3.06 லட்சம் ஐஎம்எஃப்எல் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், 2,139 வழக்குகள் பதிவாகியுள்ளன. 1.58 லட்சம் லிட்டருக்கும் அதிகமான நாட்டு மதுபானங்களை விற்பனை செய்தல் மற்றும் வாங்குவதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் 7,796 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் சூரத்தின் கிராமப்புறங்களில் காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரூ.8.9 கோடி மதிப்புள்ள IMFL பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நவ்சாரி பகுதிகளில் 6.23 லட்சம் IMFL பாட்டில்களும், கோத்ரா பகுதிகளில் 8.8 கோடி மதிப்புள்ள IMFL பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பாவ்நகரில் ரூ.8.7 கோடி மதிப்புள்ள ஐ.எம்.எஃப்.எல் மற்றும் நாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மதுபான பாட்டில்களைப் பெரும்பாலும் தண்ணீர் தொட்டிகளுக்கும், நிறைய புதிய காய்கறி மூட்டைகளுக்கு அடியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். 2024 ஆம் ஆண்டில், காவல் துறையின் அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் ரூ.144 கோடி மதிப்புள்ள 82,00,000 பாட்டில்களை அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. தவிர, ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒரு பாட்டில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம் (IMFL) பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அது தெரிவிக்கிறது.