நாட்டில் உள்ள 8 ஐஐடி மற்றும் 7 ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 80 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கே கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆய்வுகள் வாயிலாக தெரியவருகிறது. இதனால் இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பட்டியலினத்தவர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினத்தவருக்கு 7.5 சதவீதமும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறாக இருக்கிறதா என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, இந்தூரில் உள்ள ஐஐஎம் நிறுவனத்தில் 109 பணியிடங்களில் 106 இடங்கள், அதாவது 97. 2 பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பட்டியினத்தவரோ, பழங்குடியினரோ பணியில் இல்லை. இதேபோல் உதய்பூரில் உள்ள ஐஐஎம்-மில், 90 சதவீத பணிவாய்ப்புகள் பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
லக்னோ ஐஐஎம்மில் 95 சதவீதம் பணிவாய்ப்புகள் பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. 6 ஐஐஎம்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பழங்குடியினத்தவர்கள் யாருக்கும் பணி வழங்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தமாறு போராட்டம் நடத்தப்பட்ட பெங்களூரு ஐஐஎம்மில் 85 சதவீத பணிவாய்ப்புகள் பொதுப்பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மும்பை மற்றும் கரக்பூரில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் 90 சதவீத பணிவாய்ப்புகள் பொதுப்பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவை சார்ந்த 700-க்கும் மேற்பட்டோர் இங்கு பணிவாய்ப்பை பெற்றுள்ளனர்.
மாண்டி, காந்திநகர், கான்பூர், கவுகாத்தி மற்றும் டெல்லியில் உள்ள ஐஐடிக்களில் 80 முதல் 90 விழுக்காடு பணியிடங்கள் பொதுப்பிரிவினரை கொண்டே நிரப்பப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள 13 ஐஐஎம் நிறுவனங்களில் 82.8 விழுக்காடு பணியாளர்கள் பொதுப்பிரிவைச் சார்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 9.6 சதவீதம் பேருக்கும், பட்டியலினத்தவருக்கு 5 சதவீதமும் பழங்குடிகளுக்கு ஒரு சதவீதமும் பணிவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் எஞ்சியவர்களுக்கு பணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 21 ஐஐடி நிறுவங்களில் 80 சதவீத பணிவாய்ப்புகள் பொதுப்பிரிவினருக்கே கிடைத்துள்ளது. 7 ஐஐஎம் நிறுவனங்களில் கிடைக்கபெற்ற தகவல்களில் அங்கு 256 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றில் 38 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும். இதேபோல் ஐஐடி நிறுவனங்கள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அங்கு 1,557 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவருகிறது. கவுட் கிரண் குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களை பெற்றுள்ளார் .