5.4% ஆக குறைந்த ஜிடிபி.. ஆனாலும் வேகமாய் முன்னேறும் இந்தியப் பொருளாதாரம்!
ஒருநாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் மொத்த மதிப்பே, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எனப்படுகிறது. இந்தியாவின் மத்திய புள்ளியியல் அலுவலகம் ஒரு காலாண்டுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு நான்கு முறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும். இது மட்டுமில்லாமல், வருடாந்திர தரவுகளும் ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும். அந்த வகையில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (Q2FY25) வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் 5.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான 6.7% வளர்ச்சியிலிருந்தும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான 8.1% வளர்ச்சியிலிருந்தும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். இந்த நிதியாண்டில் நிதி வளர்ச்சி 6.2 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையில், அது 5.4 சதவீதமாகக் குறைந்தது. 2022-23 நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 4.6 சதவீதமாக இருந்ததே இதற்கு முன்பிருந்த குறைந்த அளவாகும். இருப்பினும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததற்கு மிகப்பெரிய காரணம், தொழில்துறையில் உற்பத்தி அளவு இல்லாததுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், கடந்த ஏழு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் இம்முறை மிகக் குறைவாக இருந்தாலும், அனைத்து நாடுகளிலும் இதுவே மிக வேகமாக உள்ளது. இதே காலாண்டில், சீனாவின் 4.6% வளர்ச்சியை விஞ்சி, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
இதற்கிடையே, “இந்தியாவின் சாத்தியமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 - 7 சதவீத வரம்பில் உள்ளது” என தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். IVCA இன் GreenReturns உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், "இந்தியாவின் சாத்தியமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5-7 சதவிகிதம் வரம்பில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஏற்கெனவே செய்த காரியங்களின் பின்னணியில் அதை அடைய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.