பிரதமர்
பிரதமர் புதிய தலைமுறை
இந்தியா

மக்களவையில் பிரதமர் உரை - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

PT WEB

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதில் பாஜக மட்டும் 370 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள் இதோ...

குடியரசுத்தலைவரும் செங்கோலும்...

“நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய போது, குடியரசுத் தலைவருக்கு பின்னால் அனைவரும் அணிவகுத்து வந்தனர். இந்தியா விடுதலை பெற்ற போது அதற்கு சாட்சியாக இருந்த செங்கோல், ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

மக்களவையில் பிரதமர் மோடி

‘பார்வையாளர்களாக எதிர்க்கட்சிகள்...’

நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என எண்ணும் எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுகிறேன். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. பார்வையாளர்கள் வரிசையில்தான் எதிர்க்கட்சிகள் அமரும்.

தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை எதிர்க்கட்சிகள் இழந்ததை நான் காண்கிறேன். எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம். கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் பொறுப்பை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது.

‘குடும்ப அரசியல்’

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல்.

‘காங்கிரஸால் நினைத்துக் கூட பார்க்க முடியாது’

மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது. நாட்டின் சாதனையை ரத்து செய்யும் முயற்சியை எத்தனை காலம் கடைபிடிப்பீர்கள்?

2014ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 11வது பெரிய நாடாக இருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா 3வது பெரிய நாடாக உருவெடுக்கும் என்று அப்போதைய நிதியமைச்சர் கூறியுள்ளார். அதாவது, 2044ம் ஆண்டு இந்தியா 3வது நாடாக முன்னேறும் என குறிப்பிட்டதை வைத்தே அவர்களது தொலைநோக்கு பார்வையை புரிந்து கொள்ளலாம். நாட்டில் இன்று எத்தகைய வேகத்தில் பணிகள் நடக்கிறது என்பதை காங்கிரஸால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 4 கோடி வீடுகளை மக்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளது இந்த அரசு.

‘ஓ.பி.சி பிரிவினருக்கு...’

பாஜக அரசின் மூன்றாவது பதவிக்காலம் மிகப்பெரும் முடிவுகளை கொண்டதாக இருக்கும். அது அடுத்த 100 ஆண்டுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் காலமாக இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஓ.பி.சி பிரிவினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் தற்போது அரசுப் பதவியில் எத்தனை ஓ.பி.சி பிரிவினர் உள்ளனர் என எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.