இந்தியாவில் நான்கு மாதங்கள் நீடித்த பருவமழை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் சராசரியைவிட 8% அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
இந்தியாவில் நான்கு மாதங்கள் நீடித்த பருவமழை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் பருவமழையால் வடமாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கூடவே நிலச்சரிவு சம்பவங்களும் தொடர்ந்தன. இதனால் உயிரிழப்புகளும் அரங்கேறின. குறிப்பாக, ஜார்க்கண்ட், பீகார், குஜராத், மிசோரம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்தப் பருவ மழையால் பாகிஸ்தானிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்தப் பருவமழையால், நாடு முழுவதும் சராசரியைவிட 8% அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இந்த முறை இயல்பான 868.6 மி.மீட்டருக்குப் பதிலாக 937.2 மி.மீட்டர் மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இயல்பைவிட மிக அதிக மழை பெய்த நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில் இயல்பைவிட 20% குறைவாகவே மழை பெய்துள்ளது. அதேசமயம், வடமேற்கு இந்தியாவில் 2001ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகபட்ச மழையாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் 2025 வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் மொத்தம் 1,528 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் வெள்ளம் மற்றும் கனமழையால் 935 பேரும், இடி மற்றும் மின்னலால் 570 பேரும், வெப்ப அலையால் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தக் காலத்தில் இந்தக் காலத்தில், அதிகபட்ச உயிரிழப்புகளைப் பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம்:
மொத்த உயிரிழப்பு: 290 பேர்
இடி/மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு: 135 பேர்
வெள்ளம்/கனமழையால் உயிரிழப்பு: 153 பேர்
வெப்ப அலையால் உயிரிழப்பு: 1
மஹாராஷ்டிரா:
மொத்த உயிரிழப்பு: 153 பேர்
இடி/மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு: 18 பேர்
வெள்ளம்/கனமழையால் உயிரிழப்பு: 135 பேர்
இமாச்சல் பிரதேசம்:
மொத்த உயிரிழப்பு: 141 பேர்
இடி/மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு: 1
வெள்ளம்/கனமழையால் உயிரிழப்பு: 140 பேர்
ஜம்மு காஷ்மீர்:
மொத்த உயிரிழப்பு: 139 பேர்
வெள்ளம்/கனமழையால் உயிரிழப்பு: 139 பேர்
ஜார்கண்ட்:
மொத்த உயிரிழப்பு: 129 பேர்
இடி/மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு: 95 பேர்
வெள்ளம்/கனமழையால் உயிரிழப்பு: 34 பேர்
பீகார்:
மொத்த உயிரிழப்பு: 62 பேர்
இவர்கள் அனைவரும் இடி/மின்னல் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.