5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை.. வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி?
அக்டோபர் ஒன்றாம் தேதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (30-09-2025), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக நாளை (அக்.1), வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இதனால், இன்றுமுதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.