ICICI BANK FB
இந்தியா

ICICI BANK|ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிப்பு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

ICICI BANK |ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Vaijayanthi S

ICICI BANK | இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் ஒன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும், அப்போதிலிருந்து தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியுள்ளது. அதன்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் புதிதாக சேமிக்குகணக்கு தொடங்கினால் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வைத்திருக்க வேண்டும்.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயையும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாயையும் இருப்புத்தொகையாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இருப்புத்தொகை குறைவாக உள்ளவர்களுக்கு 6 சதவீதம் அல்லது 500ரூபாய், இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் 3 பண பரிவர்த்தனைகள் மட்டும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய கட்டணமாக 150 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு 3 ரூபாய் 50 காசுகள், இதில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை சேமிப்புக் கணக்குகள் மற்றும் சம்பளக் கணக்குகள் போன்ற சட்டப்பூர்வ கணக்குகள் குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லாமல் தொடர்ந்து திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு நிலுவைகளின் பங்கை அதிகரிப்பதும், இயக்கச் செலவுகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். புதிய சேமிப்புக் கணக்கு ஒரு புதிய தயாரிப்பாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்பு சேமிப்புக் கணக்குகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பல கட்டணங்கள் இப்போது இந்தக் கணக்குகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.