ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் புடவைக்கு பணம் கட்டி ஏமாந்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. பூர்ணிமா கலெக்ஷன்ஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவை பார்த்துவிட்டு பல்லவி அக்ருதி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கடந்த 10ஆம் தேதி புடவை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இந்த நிறுவனம் தரமான புடவைகளை விற்பதாக விளம்பரம் செய்த நிலையில், அதை நம்பி பணத்தை செலுத்திவிட்டு காத்திருந்த அதிகாரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நீண்ட நாட்கள் ஆகியும் ஆர்டர் செய்த புடவை வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அக்ருதி, பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பூர்ணிமா கலெக்ஷன்ஸ் என்ற யூடியூப் சேனல் மீது புகார் அளித்தார். தான் இழந்தது சிறிய தொகையாக இருந்தாலும் இதேபோல் பலரும் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிவித்த அக்ருதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.