கேபினட் அமைச்சரான பிறகு தனது மனைவி ரிவாபாவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துச் செய்தியை கிரிக்கெட் வீரர் ஜடேஜா அனுப்பியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பிடித்திருந்தார். அதன்பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். தற்போது ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். என்றாலும், தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் 104 ரன்கள் எடுத்ததுடன், எட்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், கேபினட் அமைச்சரான பிறகு தனது மனைவி ரிவாபாவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துச் செய்தியை ஜடேஜா அனுப்பியுள்ளார். 2027ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, தொகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக, முதல்வர் பூபேந்திர படேலை தவிர அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 16 அமைச்சர்களும் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். இதையடுத்து, குஜராத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. இதில், ஹர்ஷ் சங்கவி, துணை முதல்வராகப் பதவியேற்றார்.
புதிய அமைச்சர்களில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், ஜாம்நகர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ரிவாபா ஜடேஜாவும் இன்று அமைச்சராகப் பதவியேற்றார். ஜடேஜாவின் மனைவிக்கு அமைச்சர் வழங்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சராகி இருக்கும் தனது மனைவி ரிவாபாவுக்கு கணவர் ஜடேஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துப் பதிவில், “உங்களையும் உங்கள் சாதனைகளையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அற்புதமான பணிகளைச் செய்து, அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். குஜராத் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக நீங்கள் சிறந்த வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்" எனப் பதிவிட்டுள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தைப் பொறுத்தவரையில், அவரது மனைவி ரிவாபா ஜடேஜா 2019ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டார். ரவீந்திர ஜடேஜாவும் தனது மனைவிக்காக பிரசாரம் செய்தார், மேலும் அவர் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜாவின் தந்தையும் சகோதரியும் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016இல் ஜடேஜாவுக்கும் ரிபாபாவுக்கும் திருமணம் நடைபெற்றது, அவர்களுக்கு நித்யானா என்ற மகள் உள்ளார்.