Saffron  reuters
இந்தியா

லட்சம் ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூ... இனி வீட்டிலேயே வளர்க்கலாம் ... எப்படி?

குங்குமப்பூ வளர்ப்பதற்கான எளிய வழிகள்: வீட்டிலேயே சாகுபடி செய்யலாம்

PT WEB

குங்குமப்பூ உலகின் விலையுயர்ந்த நறுமணப் பொருள். வீட்டில் சிறிய தொட்டியில் குங்குமப்பூ வளர்க்கும் வழிமுறைகளை டாக்டர் அன்ஷு YouTube-ல் பகிர்ந்துள்ளார். கிழங்குகளை ஆரோக்கியமாக தேர்வு செய்து, சரியான மண் கலவையில் நடவு செய்து, சூரிய ஒளி மற்றும் தண்ணீர் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கள் மலர்ந்து, குங்குமப்பூ அறுவடை செய்யலாம்.

செய்தியாளர் - M.மீரா

குங்குமப்பூ என்பது உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலையுயர்ந்த நறுமணப் பொருளாகும். இது குரோகஸ் சட்டைவஸ் (Crocus sativus) என்ற பூவின் உலர்த்தப்பட்ட சூலகக் காம்புகளிலிருந்து (dried stigmas) பெறப்படுகிறது. இது உணவுகளுக்கு தனித்துவமான சுவை, நறுமணம் மற்றும் பிரகாசமான மஞ்சள் நிறத்தைத் தருகிறது. மேலும், குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது சருமப் பொலிவு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது.

Saffron

இந்தியாவில் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீரில் குங்குமப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், வீட்டில் உள்ள சிறிய தொட்டியில்கூட குங்குமப்பூவை வளர்க்க முடியும் என்பது பலருக்கும் தெரியாது.

YouTube-ல் Dentistmommy என்ற சேனலில் டாக்டர் அன்ஷு, வீட்டிலேயே குங்குமப்பூ வளர்க்கும் வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார்.

குங்குமப்பூ வளர்ப்பது எப்படி?

விதைகள் மூலம் குங்குமப்பூ வளர்வதில்லை. வெங்காயம் போன்ற தோற்றமுடைய கிழங்குகள் மூலமாகவே வளர்கிறது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் ஆரோக்கியமான கிழங்குகளை வாங்க வேண்டும். குறைந்தது 8 அங்குல ஆழமுள்ள மண் தொட்டியைத் தேர்வு செய்ய வேண்டும்.

இதற்கு இரண்டு பங்கு சாதாரண மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம்.

saffron

ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் கிழங்குகளை 4 அங்குல ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கிழங்குக்கும் இடையே 4 அங்குல இடைவெளி இருக்க வேண்டும்.

செடிகள் வளர போதுமான சூரிய ஒளி தேவை. மண்ணின் மேற்பரப்பு காய்ந்த பிறகு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிகப்படியான தண்ணீர் கிழங்குகளை அழுகச் செய்துவிடும்.

எப்போது அறுவடை செய்யலாம்?

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கள் மலரும். ஒவ்வொரு பூவின் மையத்திலும் காணப்படும் மூன்று சிவப்பு நிற இழைகள்தான் குங்குமப்பூ. அவற்றைப் பறித்து 2 முதல் 3 நாட்கள் உலர்த்தி, காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமிக்கலாம்.

சரியான பராமரிப்பு இருந்தால், வீட்டின் பால்கனி அல்லது மாடியிலேயே குங்குமப்பூவை வளர்த்து அறுவடை செய்ய முடியும்.