இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது 26 பேர் துணை முதல்வர்களாக இருக்கிறார்கள். மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, யார் முதல்வராக பதவி ஏற்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுவது போலவே, துணை முதல்வராக யாரை நியமிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கும் போக்கும் இப்போது சர்வ சாதாரணமாகியிருக்கிறது.
இந்தியாவில் தற்போது டெல்லி உள்பட 17 மாநிலங்களில் 26 பேர் துணை முதல்வர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர்கள் உள்ளனர். 1950 முதலே மாநிலங்களில் துணை முதல்வர்களை நியமிக்கும் நடைமுறை இருந்தாலும், 2014ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகே துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவது பெரும் போக்காக உருவெடுத்து இருக்கிறது.
இத்தனைக்கும் துணை முதல்வர் என்பது அரசியலைமைப்பு அடிப்படையிலான பதவி கிடையாது. சட்டப்படி, ஓர் அமைச்சருக்குரிய அதிகாரமே துணை முதல்வருக்கும் உண்டு. கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்க, வெவ்வேறு சாதி, கோஷ்டிகளைத் திருப்திப்படுத்த, வாரிசு அரசியல் என துணை முதல்வர்கள் நியமனத்துக்குப் பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கின்றன.
சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரையில் 190 துணை முதல்வர்கள் இருந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆந்திர பிரதேசத்திலிருந்து 21, மகாராஷ்டிராவிலிருந்து 17, கோவாவிலிருந்து 16, பிஹார் மற்றும் கர்நாடாகவிலிருந்து தலா 13 துணை முதல்வர்கள் இருந்துள்ளனர். ஆந்திராவில், 2019 - 2024 காலகட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 9 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இதுவரையில் 3 பேருக்கு துணை முதல்வராகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. 2009இல் ஸ்டாலின், 2017இல் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளார். துணை முதல்வர்களைப் போலவே, இந்திய துணை பிரதமர்களாக இதுவரை 8 பேர் பதவி வகித்துள்ளனர். நேரு ஆட்சியில் வல்லபாய் படேல், இந்திரா காந்தி ஆட்சியில் மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் ஆட்சியில் எல்.கே.அத்வானி ஆகியோர் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.