விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் ஸ்விட்ச்சுகள் அணைந்தது எப்படி என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் எடை 2 லட்சத்து 13 ஆயிரத்து 401 கிலோ என்றும் உள்ளே இருந்த எரிபொருளின் அளவு 54 ஆயிரத்து 200 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான எந்த ஒரு பொருளும் விமானத்திற்குள் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எரிபொருள் மாதிரி ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டதாகவும் அது இயல்பானதாகவே இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பறவைகள் தாக்கி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. விமான விபத்திற்கு சதிதான் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் இன்ஜினுக்கான எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டது எப்படி என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. விமானி கவனக்குறைவாக ஸ்விட்சை அணைத்தாரா அல்லது தெரிந்தே அணைத்தாரா அல்லது ஸ்விட்ச் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தானாக அணைந்துவிட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
எனினும் மிக அதிக எடை, பறவைகள் மோதல், எரிபொருள் குறைபாடு, வெடிகுண்டால் விபத்து போன்ற காரணங்கள் முதல் கட்ட ஆய்வில் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போது கிடைத்துள்ள தகவல்களுடன் மேலும் பல ஆதாரங்கள் பதிவுகள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் இதற்காக ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களிடம் தகவல்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட விசாரணைகளில் விபத்துக்கான திட்டவட்ட காரணம் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.