மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும், ஆந்திராவிலும் அடுத்தடுத்து இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மணப்பெண்கள் பற்றிய பின்னணியைத் தேடும் சூழல் அதிகரித்திருப்பதாக துப்பறியும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் துப்பறியும் நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் ராஜேஷ் பாண்டே,, “சோனம் ரகுவன்ஷி வழக்கிற்குப் பிறகு, பெண்களை விசாரிக்க வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு ஆண் நண்பர்கள் இருந்தால், குற்றப் பின்னணிகள் இருந்தால் என எல்லாவற்றையும் பற்றி அறிய விரும்புகிறார்கள். சமீபத்தில் இதுபோன்ற 18 வழக்குகள் எங்களுக்கு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இந்த வகையான இலக்கு சரிபார்ப்பை மட்டுமே விரும்புகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
அதிரடி துப்பறியும் சேவைகளின் மண்டலத் தலைவர் சுபாஷ் சவுத்ரி, “முன்னதாக, இந்த வகையான விசாரணைகள் பெரும்பாலும் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் அல்லது நிதி மோசடியைக் கண்டறிய முயன்றன. ஆனால் இப்போது, ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஆழமான தனிப்பட்ட அம்சங்களுக்காகத் திரும்பியுள்ளது. கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்புப் பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகள்கூட இதில் விசாரிக்கப்படுகிறது. முன்னர், அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்கள் துப்பறியும் நபர்களைப் பணியமர்த்துவார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு மாதமும் 70 முதல் 80 விசாரணைகளைப் பார்க்கிறோம். சில குடும்பங்களுக்கு, ஒரு துப்பறியும் நபர் இப்போது ஒரு பண்டிட்டைவிட முக்கியமானவராக இருக்கிறார். காதல் திருமணங்களும் ஆன்லைன் உறவுகளும் ஒரு புதிய பயத்திற்கு வழிவகுத்துள்ளன - இனி யாரும் ஒரு வாய்ப்பைப் பெற விரும்பவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் கண்காணிப்பு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் பின்னணிச் சோதனைகள் ஆகியவற்றின் தகவல்கள் துப்பறியும் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் சரிபார்ப்புப் பட்டியலில் ஆடை அலங்காரம், குரல் தொனி, நண்பர்கள் குழு, தினசரி அட்டவணை மற்றும் ஆன்லைனில் செலவிடும் மணிநேரங்கள் ஆகியவையும் அடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போபாலை தளமாகக் கொண்ட மருத்துவ உளவியலாளர் டாக்டர் சத்யகாந்த் திரிவேதி, "மக்கள், குற்ற நிகழ்ச்சி சிந்தனையை ஏற்றுக்கொண்டு அதை நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியான குற்றத் தொடர்களைப் பார்ப்பது அவர்களின் நம்பிக்கையைப் பற்றிய உணர்வை மங்கச் செய்கிறது. திருமணங்கள் நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். இப்போது அவை சந்தேகத்துடன் தொடங்குகின்றன” என்கிறார்.