தேனிலவு கொலை | சோனத்திடம் 200 முறை பேசிய நபர்.. விலகிய மர்மம்.. விசாரணையில் புது தகவல்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும், சோனம் என்பவருக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணமான நிலையில் இருவரும் மேகாலயா மாநிலத்திற்குத் தேனிலவுக்குச் சென்றனர். அங்கு இருவரும் திடீரென காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. சில நாட்கள் கழித்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும், மலைப் பள்ளத்தாக்கில் புதருக்குள் கடந்த ஜூன் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதன்பின் சில நாட்கள் கழித்து மனைவி சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார். இவரைத் தவிர, மேலும் மூவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
’காணாமல் போன தம்பதி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு, தற்போது ’தேனிலவு கொலை’ என்ற பெயரில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சோனமுக்கு வேறு ஒரு நபருடன் காதல் இருந்ததாகவும் அவருடன் சேர்ந்து வாழ விரும்பி கணவரை கொன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தற்போது நடைபெற்று போலீசாரின் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, இக்கொலை வழக்கு தொடர்பாகப் புதிய பெயர் ஒன்று சம்பந்தப்பட்டிருந்தது. அது, விசாரணையில் முன்னர் அறியப்படாத சஞ்சய் வர்மா என அறியப்பட்டது. மார்ச் 1 முதல் மார்ச் 25 வரை காவல் துறையினரால் அணுகப்பட்ட அழைப்பு தரவு பதிவுகளின்படி, சோனமும் சஞ்சயும் 119 அழைப்புகளைப் பரிமாறிக் கொண்டதாகவும், தற்போது அவர் எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சஞ்சய் வர்மா யார் என்பது குறித்த தகவல் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர், ராஜாவின் மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் விரிவான தொலைபேசி தொடர்பு வைத்திருந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போதைய விசாரணையில், சோனம், ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்திற்கு முன்னும்பின்னும் சஞ்சய் வர்மா என்ற நபருடன் 200க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை, கிட்டத்தட்ட 39 நாட்களுக்குள் சோனமும் சஞ்சயும் 234 அழைப்புகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இருவரும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் வரை பேசியதாகச் சொல்லும் போலீசார், யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சோனம் தன்னுடைய காதலர் ராஜின் எண்ணையே ’சஞ்சய் வர்மா’ என்று சேமித்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.