Manmohan Singh pt
இந்தியா

அமைதியாக ஓய்வெடுங்கள் மன்மோகன்..!

"டாக்டர் மன்மோகன் சிங் (92) கடந்த டிசம்பர் 26-ல் இயற்கை எய்தினார். அவர் நிதியமைச்சராகப் பதவியேற்ற நாள் (1991 ஜூன் 21) முதல் எனக்கு ஏற்பட்ட தொடர்பு ஓர் முடிவுக்கு வந்துவிட்டது"

PT WEB

கட்டுரையாளர் - ப. சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் 

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

மொழிபெயர்ப்பு - ரங்காச்சாரி

மன்மோகன் சிங் - அவருடைய வார்த்தையிலேயே சொல்வதானால் – ‘எதிர்பாராதவிதமாக’ நிதியமைச்சராகப் பதவியேற்றவர். நிதியமைச்சர் பதவிக்கு அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் முதலில் தேர்வு செய்திருந்தவர் மிகச் சிறந்த கல்வியாளரும், பொருளாதார நிபுணருமான ஐ.ஜி. படேல் தான். அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்த படேல், மன்மோகன் சிங்கின் பெயரை அவருக்குப் பரிந்துரை செய்தார்.

நரசிம்ம ராவ் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் நீல நிற தலைப்பாகையுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அந்தப் பெருந்தகையைப் பார்த்து பலரும் வியப்படைந்தனர். மத்திய அரசின் காபினெட்டில் அவர் இடம் பெறுவார் என்பது நிச்சயமாகிவிட்டது, அவருக்கு எந்த இலாகாவை பிரதமர் ராவ் ஒதுக்குவார் என்ற குறுகுறுப்பு அனைவருக்குள்ளும் எழுந்தது. சில மணி நேரங்களுக்கெல்லாம் அவர், ‘நார்த் பிளாக்’ என்று அழைக்கப்படும் நிதியமைச்சக தலைமையிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உருக்கு போன்ற உள்ள உறுதி

இந்திய ரூபாயின் மாற்றுச் செலாவணி மதிப்பைக் குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி, 1991 ஜூலை முதல் நாள் அறிவித்தது. பிரதமர் நரசிம்ம ராவ் என்னை அவருடைய அலுவலகத்துக்கு ஜூலை 3-ம் நாள் அழைத்து, பணமதிப்பைக் குறைத்த அந்த நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை சகாக்கள் சிலருக்கு (உண்மையில், பிரதமருக்கே அந்த எண்ணம்தான்) இருந்த சந்தேகங்களைக் குறிப்பிட்டார். நான் உடனே, செலாவணி மாற்று மதிப்பு தொடர்பாக அவருக்கு விளக்கினேன்; ரூபாயின் மாற்று மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறைந்து வருகிறது, கையிருப்பில் அன்னியச் செலாவணியும் மிகவும் குறைவாக இருக்கிறது, இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் தயங்குகிறார்கள் என்பதையெல்லாம் விவரித்தேன். “ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பை மேலும் ஒரு முறை குறைக்கப் போகிறார்கள், அந்த செயலைப் பாதியில் நிறுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை, சிறிது காலத்துக்கு ஒத்திவைக்குமாறு நிதியமைச்சரிடம் என் சார்பில் கோரிக்கை வைக்க முடியுமா?” என்று கேட்டார் பிரதமர் ராவ்.

இதே கோரிக்கையுடன் மன்மோகனை சந்திக்க அவர் என்னை மட்டும் அனுப்பியிருக்க மாட்டார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது.  என் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்லாவிட்டாலும் ‘நார்த் பிளாக்’ அலுவலகத்துக்கு உடனே சென்றேன், அங்கே என்னை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்கள். அதுதான் அவருடன் அதிகாரப்பூர்வமான என் முதல் சந்திப்பு; பிரதமர் ராவின் கோரிக்கையை - கட்டளை அல்ல – அவரிடம் தெரிவித்தேன். மன்மோகன் சிங் அந்த கோரிக்கையைக் கேட்டு சற்றே குழப்பம் அடைந்தார் என்பது அவருடைய முகத்திலேயே தெரிந்தது, அது நான் வைத்த கோரிக்கையாலும் இருக்கலாம், கோரிக்கையுடன் என்னை ஏன் அனுப்பினார் என்றும் இருக்கலாம். நான் சொன்னதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்மோகன், “இரண்டாவது பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கை காலை 10 மணிக்கு பங்குச் சந்தை திறக்கப்பட்டதுமே தொடங்கிவிட்டதே” என்றார். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த டாக்டர் சி. ரங்கராஜனிடம் இந்தப் பண மதிப்பு குறைப்பு நடவடிக்கை குறித்து மன்மோகன் சிங் என்ன கூறினார் – ‘அதைக் கேட்டு துள்ளி குதித்தேன்’ என்று ரங்கராஜன் எப்படி பதில் அளித்தார் என்பதெல்லாம் இப்போது பண மதிப்பு குறைப்பு நடவடிக்கை தொடர்பான தொன்மக் கதையாகிவிட்டது. அந்த ஒரேயொரு செயல், தான் சரியென்று தீர்மானித்ததை உள்ள உறுதியுடன் செயல்படுத்தும் நெஞ்சுரம் மிக்கவர் நிதியமைச்சர் என்பதை அனைவருக்கும் உணர்த்திவிட்டது.

அதே எஃகு போன்ற உள்ள உறுதி சில ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி அரசு பிழைக்குமா என்ற பெரிய கேள்வி எழுந்தபோது மீண்டும் வெளிப்பட்டது. மக்கள் பயன்பாட்டுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் உடன்படிக்கை செய்து கொள்வதற்கு, கூட்டணி அரசை ஆதரித்த இடதுசாரி கட்சிகள் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி - கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ‘அந்த உடன்பாடு இறுதி செய்யப்பட்டால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்தார். பிரதமரின் முடிவையும், அணு ஆற்றல் ஒப்பந்தத்தையும் ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிலேயே பலர்கூட, ‘இந்த ஒப்பந்தத்துக்காக ஆட்சியைப் பணயம் வைக்க வேண்டுமா – ஆட்சி கவிழ்ந்துவிட்டால் எப்படியும் இந்த ஒப்பந்தமும் காலாவதியாகிவிடப் போகிறது’ என்று கட்சிக்குள் குமைந்தார்கள்.

ஆனால் மன்மோகன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்த உடன்பாட்டைக் கைவிடுமாறு காங்கிரஸ் கட்சி தனக்கு நெருக்குதல் அளித்தால், பதவி விலகவும் தயார் என்று என்னிடம் தெரிவித்தார் மன்மோகன். அவருடைய கருத்தில் உள்ள வலுவை ஆதரித்த நான், பிற கட்சிகளிடம் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு திரட்ட முயற்சி செய்யுமாறு அவரிடம் கூறினேன். அவர் சாணக்கியத்தனமாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தொடர்பு கொண்டு ஒப்பந்தத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமாறு கோரினார். அப்துல் கலாம் அளித்த ஆதரவு அறிக்கையை முன்வைத்து, முலாயம் சிங்கை அணுகி சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை மக்களவையில் பெற்றார். இடதுசாரி கட்சிகளின் அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு, நம்பிக்கை தீர்மானத்தில் அரசு மக்களவையில் வென்றது - ஒப்பந்தம் சில நாள்களுக்குப் பிறகு கையெழுத்தானது. அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்ட பிறகும்கூட தனது இயல்புக்கு ஏற்ப இடதுசாரித் தலைவர்களை கண்ணியமாக நடத்திய மன்மோகன், அவர்களுடன் சுமுக உறவையும் தொடர்ந்தார்.

இரக்கமுள்ள தாராளர்

டாக்டர் சிங்கின் நிபந்தனையற்ற ஆதரவு இல்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மிகப் பெரிய மக்கள் நல்வாழ்வு திட்டங்களை வெற்றிகரமாக தொடங்கியிருக்கவோ - அமல்படுத்தியிருக்கவோ முடியாது என்பதை மிகச் சிலர்தான் உணர்ந்திருக்கின்றனர். அவர் அரசு கொண்டுவந்த பல்வேறு நல்வாழ்வு திட்டங்களில் இரண்டு குறிப்பிடத்தக்க உதாரணங்கள். விவசாயக் கடன் ரத்து (2008) மற்றும் உணவு (தானியம்) பெறும் உரிமை திட்டம் (2013). இவ்விரு நல்வாழ்வு திட்டங்களையும் வலிமையாக ஆதரித்த சிங், பேரியல் பொருளாதார நிலையிலும் (அரசின் செலவுக்கேற்ப, வரவைப் பெருக்கி பராமரிப்பது) ஒரு கண் வைத்துக் கொள்ளுமாறு என்னை கேட்டுக் கொண்டார்.

அரசின் வருவாய் பெருகாமல், செலவுகளை மட்டும் அதிகரித்துக் கொண்டே போனால் எவ்வளவுதான் நல்ல நல்வாழ்வு திட்டமாக இருந்தாலும் சிறிது காலத்துக்குப் பிறகு – அதாவது இடைநிலைக் காலத்திலோ, நீண்ட காலத்திலோ அதைத் தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட நேரிட்டுவிடும். அரசின் நிதிப் பற்றாக்குறை பெரிதாகிவிடாமல் கட்டுக்குள் வைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் கேட்டு திருப்தியடைந்த அவர் நல்வாழ்வு திட்டங்களுக்கு அனுமதி வழங்கினார்.

டாக்டர் மன்மோகன் சிங் தனது உள்ளுணர்வின்படி ஒரு சீர்திருத்தவாதி என்றாலும், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது ஏழைகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் உணர்வுபூர்வமாகவே மேற்கொண்டார். குறிப்பிட்ட இலக்கை மட்டும் அடையாமல் புற விளைவுகளாக, பல்வேறு தளங்களிலும் சாதகமான அம்சங்களுக்கு வழியேற்படுத்தும் சமூகநல திட்டங்களை வெகுவாக ஆதரித்தார்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நல்வாழ்வு நடவடிக்கைகளும் ஒரே சமயத்தில் அமல்படுத்தப்படக்கூடியவையே என்பதை எங்களுக்கு அவர் கற்றுத்தந்தார். இன்றைக்கு வளமான வாழ்க்கையுடன் பெருகியிருக்கும் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது மன்மோகன் சிங்கின் கொள்கைகள்தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

இதோ வரலாறு

இன்றைய இளைய தலைமுறை – 1991-க்குப் பிறந்தவர்கள் – இந்தியாவில் முன்பிருந்த நிலைமையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்; நாடு முழுவதற்கும் ஒரேயொரு தொலைக்காட்சி சேனல்தான் (தூர்தர்ஷன்), ஒரேயொரு பிராண்டு கார், ஒரேயொரு விமான நிறுவனத்தின் சேவை, ஒரேயொரு தொலைபேசி சேவை நிறுவனம் (பிஎஸ்என்எல்), பெரும்பாலான மக்கள் தகவல் தெரிவிக்க ‘டிரங்க் கால்’ என்று அழைக்கப்படும் பொதுத் தொலைபேசி வசதி, நண்பர்கள், உறவினர்களுடன் பேச ‘பிசிஓ-எஸ்டிடி-ஐஎஸ்டி’ பொது அழைப்பகங்களைத்தான் நம்பியிருக்க வேண்டும், இரண்டு சக்கர வாகனங்களை வாங்கவும், ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவுசெய்யவும், பாஸ்போர்ட் பெறவும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் - நம்ப முடியாமல் கேட்டுக் கொள்கிறார்கள். இப்போதுள்ள நிலைமைக்கான மாற்றங்களை அடைய, (தாராளமய) விதை போட்டவர் டாக்டர் மன்மோகன் சிங்; காலங்கடந்து இதை அங்கீகரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகனின் இறப்புக்குப் பிறகு அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

டாக்டர் சிங்கின் நிர்வாகம் எப்படிப்பட்டது, அவர் எப்படிச் செயல்பட்டார் என்பதை வரலாறு எப்படிப் பதிவு செய்யும் என்பது தெரியாவிட்டாலும், அவர் செய்த இரண்டு சாதனைகள் வரலாற்றுப் புத்தகத்தில் அழியாத இடைத்தைப் பெற்றுவிடும் என்று நம்புகிறேன்: முதலாவது, அவருடைய பத்தாண்டுக்கால ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) சராசரியாக 6.8% ஆக இருந்தது. இரண்டாவது, ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் (யுஎன்டிபி) ஆவணங்களின்படியே அவருடைய பத்தாண்டுக்கால நிர்வாகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 27 கோடி ஏழைகளை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டுள்ளது.

இவ்விரண்டு சாதனைகளும் அதற்கு முன்னால் இந்தியாவில் நிகழ்ந்தே இராதவை என்பதுடன் மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணங்களாகும். இப்படியாக, அவருடைய ஆட்சிச் சிறப்பை வரலாறு ஏற்கெனவே எடைபோட்டுவிட்டது.