Vijay Diwas Swapan Mahapatra
இந்தியா

இன்று விஜய் திவாஸ்: இந்தியா உருவாக்கிய வங்கதேசம்!

அந்த வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

ரா.அரவிந்தராஜ்

பிற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா-வங்கதேச உறவு தனித்துவமானது. இந்திய வரைபடத்தை உற்றுப் பார்த்தால், அதன் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தை போலவே வங்கதேசம் காட்சியளிக்கும். வெறுமனே புவியியல், பண்பாட்டு ரீதியாக மட்டுமல்ல, ஒரு நாட்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் மற்றொன்றைப் பாதிக்கும் அளவுக்கு இன்னமும் அறுபடாத ரத்த நாளங்களைக் கொண்டவை இந்நாடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நாட்டின் விடுதலைப் போராட்ட வெற்றியை, பக்கத்து நாடும் கொண்டாடுகிற சிறப்பு உலக வரைபடத்தில் வேறெங்கும் இல்லாத அதிசயம். அந்த வெற்றிக் கொண்டாட்ட நாள்தான் (விஜய் திவாஸ்) இன்று!

53 ஆண்டுகளுக்கு முன்னால், கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்து, தனது சொந்த குடிமக்களாகிய வங்காளிகளைப் படுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம். ஒரே நாட்டை ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும்கூட மொழியாலும் இனத்தாலும் நிலத்தாலும் பண்பாட்டாலும் வெவ்வேறானவர்கள் என்ற பாகுபாடே இந்தப் படுகொலைக்கு அடித்தளம். அப்படிக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டுமே ஐந்து லட்சத்துக்கும் மேல்!

சம உரிமையற்ற நாட்டில் விடுதலைக்காகச் சமர் புரிந்த வங்க மக்களுடன் இணைந்து போரிட்டு, அவர்களுக்கான விடுதலையையும் பெற்றுத்தந்தது இந்திய ராணுவம்! ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய நடவடிக்கையின் வெற்றிக்கொண்டாட்ட நாளே( டிசம்பர் 16, 1971) விஜய் திவாஸ் என்று அழைக்கப்படுகிறது!

அந்த வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

மேற்கு வாழ்கிறது... கிழக்கு தேய்கிறது!

1947-ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்திய தீபகற்பம் மத அடிப்படையில் இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிந்தன. அதில் பாகிஸ்தான் நாடானது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான்(வங்கதேசம்) என இரண்டு தனி நிலப்பரப்புகளாக இருந்துவந்த நிலையில், உருது பேசும் மேற்கு பாகிஸ்தானுக்கே ஆட்சி அதிகாரத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். குறிப்பாக, பாகிஸ்தான் விடுதலையான அடுத்த ஆண்டே, மேற்கு பாகிஸ்தானியர்கள் பேசும் உருது மட்டுமே ஒட்டுமொத்த பாகிஸ்தானின் அதிகாரபூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்த மொழித் திணிப்புக்கு எதிராக, வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் `வங்கமே எங்கள் மொழி’ என்று குரல்கொடுத்தனர். அப்போதே பாகிஸ்தானில் மேற்கு, கிழக்கு என்ற பாகுபாடு மேலெழும்பத் தொடங்கிவிட்டது.

அதைத்தொடர்ந்து, 1970-களில் அடித்த `போலோ’ புயல் (Cyclone Bhola, 1970) கிழக்கு பாகிஸ்தானை புரட்டிப்போட்டது. சுமார் மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வங்க மக்கள் இந்தப் பேரிடரில் சிக்கி மாண்டுபோயினர். ஆனால், அரபிக் கடலோரத்தில் அமைந்திருக்கும் கராச்சியை மையமாகக் கொண்டு இயங்கிய பாகிஸ்தான் அரசோ, பாதிக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு போதுமான நிவாரணப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிருப்திக்குள்ளான கிழக்கு பாகிஸ்தானிய வங்க மக்கள் உளவியல் ரீதியாக மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்ப வழிவகுத்தது. மேற்கு வாழ்கிறது... கிழக்கு தேய்கிறது என்கிற எண்ணம் வங்க மக்களிடம் உருவானது!

அந்த உணர்வுகளை அறுவடை செய்துகொண்ட வங்க மக்களின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பெற்றார். ஆனால், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்தவர் என்ற காரணத்துக்காக ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் தடுத்தது மேற்கு பாகிஸ்தான். மேலும், இதை எதிர்த்துக் கேள்விகேட்ட முஜிபுர் ரஹ்மானைக் கைது செய்து சிறையிலடைத்தார் பாகிஸ்தானின் ராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் யாஹ்யா கான். வங்க மொழி பேசும் கிழக்கு மக்களை தன் மண்ணின் மக்களாகப் பார்க்காமல், 2000 கி.மீட்டருக்கு அப்பால் இருக்கும் தன் நாட்டின் அதிகாரத்துக்குட்பட்ட ஒரு நிலத்துண்டாகவே தூரக் கண்கொண்டு பார்த்தது மேற்கு பாகிஸ்தான். விளைவு, வங்க மக்கள் மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.

வங்கப் படுகொலையும் பாக். ராணுவமும்!

பாகிஸ்தான் ராணுவம்

மேற்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான பாரபட்சத்துக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானின் வங்க மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அரசுத்துறைகள், ராணுவம், அரசியல் இயக்கங்கள், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் `முக்தி பாஹினி' அமைப்பின்கீழ் ஒன்று திரண்டனர். `சுதந்திர வங்கதேசத்தைப் பிரகடனம் செய்து' மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக `கெரில்லா விடுதலைப் போரை' நடத்தினர்.

பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம், கிழக்கு பாகிஸ்தானில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. வங்கத்தின் குல்னா நகரத்தில் உள்ள ஒரு எஃகு உருக்காலையில், நூற்றுக்கும் மேற்பட்ட வங்க மக்களை போட்டு உயிரோடு எரித்துக் கொன்றது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்த இந்த உள்நாட்டுப் போரில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்க மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்(வங்கதேசம் இந்த இறப்பு எண்ணிக்கையை 30 லட்சம் என்கிறது). சுமார், 3 லட்சத்துக்கும் அதிகமான வங்கப் பெண்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கொடுமையின் உச்சமாக, பள்ளி செல்லும் சிறுமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான வங்கப் பெண்கள் கடத்தப்பட்டு, பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக அடைத்துவைக்கப்பட்டனர். இந்தப் போர்க்குற்றங்கள், போர் கொடுமைகளால் வாழ வழியின்றி, சுமார் 1 கோடிக்கும் அதிகமான கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் அகதிகளாக இந்திய எல்லைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

இந்தி(ரா)யாவின் தலையீடு!

ஆபரேஷன் செங்கிஸ்கான்

அதுவரை அண்டை நாட்டின் பிரச்னையாக இருந்துவந்த மேற்கு-கிழக்கு யுத்தம், அகதிகள் வருகையால் இந்தியப் பிரச்னையாகவும் உருவெடுத்தது. இந்தியாவின் எதிர்க்கட்சிகள் ஒரே புள்ளியில் இணைந்து வங்கதேச விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கூக்குரலிட்டன. இதையடுத்து இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேச விடுதலைக்கும், அதற்காக பாகிஸ்தானை எதிர்த்து போராடும் முக்தி பாஹினி அமைப்புக்கும் தனது முழு ஆதரவை வழங்கினார்.

வங்கதேச விடுதலைப் போராளிகளுக்கு இந்தியா நேரடியாகவே உதவி செய்தது. கூடவே, கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும், தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கக் கோரியும் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி என 21 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இந்திரா காந்தி.

இந்தியாவின் `வங்க ஆதரவு’ நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின. `ஆபரேஷன் செங்கிஸ்கான்' எனும் பெயரில் 1971, டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவின் எட்டு விமான நிலையங்கள்மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். இதையடுத்து இந்தியா நேரடியாக பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறங்கியது. பாகிஸ்தானின் மேற்கு, கிழக்கு என இரு திசைகளையும் நோக்கி, இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கின. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய கடற்படை, கராச்சி துறைமுகத்தைத் தாக்கியது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வைத்து, பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கிக் கப்பலையும் மூழ்கடித்தது.

போரில் அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தான் பக்கம் நிற்க, இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவுக்கரம் நீட்டியது. இந்தியாவின் அதிரடித் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போனது. சுமார் 93,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டனர். முடிவாக, போருக்குத் தலைமை தாங்கிய கிழக்குப் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.ஏ.கே.நியாஸி தனது மொத்த படைகளுடன் இந்திய ராணுவத் தளபதி ஜகஜித் சிங் அரோராவிடம் சரணடைந்தார்.

விஜய் திவாஸ்: `வங்கதேச’ விடுதலை!

டிசம்பர் 3-ம் தேதி தொடங்கிய போர் டிசம்பர் 16-ல் முடிவுக்கு வந்தது. வெறும் பதிமூன்றே நாட்களில் பாகிஸ்தான் வீழ்ந்தது. வங்க விடுதலையை `முக்தி பாஹினி’யிடம் கையளித்தது இந்திய ராணுவம். இந்தியாவின் செல்வாக்கு உலகெங்கும் உயர்ந்தது. இந்தி(ரா)யாவின் ஆதரவுடன் `வங்கதேசம்' மலர்ந்தது. பச்சை சிவப்பு வண்ணக்கொடிகள் வங்கதேச வானை அலங்கரித்தன. மீட்டுருவாக்கம் செய்ய முடியாத பெரும் பேரிழப்புக்கிடையே, சுதந்திரக் காற்றை மெல்ல சுவாசித்தனர் வங்கதேசத்து மக்கள்.

டிசம்பர் 16, 1971-ல் பெற்ற அந்த போர் வெற்றியைத்தான் `விஜய் திவாஸ்’ என இரு நாடுகளும் கொண்டாடுகின்றன. ‘‘தேசிய இனங்களின் உரிமைகளை, அவர்களது மொழி, பண்பாட்டை ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் எந்தவொரு அரசும் இறுதியில் சிதறுண்டு போகும்” என்கிற வரலாற்றுப் பாடத்தையும் அந்த தினம் உணர்த்துகிறது!

மீட்டெடுக்கப்படுமா உறவு?

“இந்தியாவும், வங்கதேசமும் அதன் உறவின் பொற்காலத்தில் இருக்கின்றன!” என்று ஷேக் ஹசீனா சொல்லி ஓராண்டுகூட ஆகவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கலின் உச்சிக்குப் போய்விட்டது இருநாட்டு உறவு.

ஆங்கிலேயர்கள் பிரிவினைவாத அரசியல் செய்தபோது, வங்கப் பிரிவினையை (Partition of Bengal) எதிர்த்துப் போராடிய வரலாறு இரு தரப்புக்கும் இருக்கிறது. வங்கச் சகோதரர்களுக்கு பாகிஸ்தானால் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதன் விடுதலைக்கு மனப்பூர்வமாக உதவியது அதன் தொடர்ச்சியே.

ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தியா-வங்கதேச உறவு தனித்துவமானது. அதனை மீட்டெடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக இந்த நாள் அமைய வேண்டும் என்பதே வரலாற்றுத் தொடர்ச்சியாகவும், அமைதியை விரும்புவோரின் எண்ணமாகவும் இருக்க முடியும்!