Hindu Outfit Shuts KFC In Ghaziabad Over Sawan FB
இந்தியா

KFC | சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவித்த கேஎஃப்சி... காரணம் என்ன தெரியுமா?

சிக்கன் உணவு வகைகளுக்கான கே. எஃப்.சி உணவகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சைவ உணவு மட்டுமே விற்கப்படுவதால் வாடிக்கையாளர் வருகை 70% சரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Vaijayanthi S

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாதில் கே.ஃப்.சி ((KFC)) உணவகம் ஒன்று தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவித்துள்ளது. கெண்டகி ஃப்ரைடு சிக்கன் என்று பெயரிலேயே இறைச்சி உணவைக் கொண்டிருக்கும் உணவகம் சைவ உணவுகள் மட்டுமே விற்கப்படும் என்று அறிவித்திருப்பதற்கு மதவாத கும்பல்களின் மிரட்டலே காரணம் எனக் கூறப்படுகிறது .

இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல்

வட மாநிலங்களில் இந்துத் துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் பாதையில் அசைவ உணவகங்கள் இருக்கக் கூடாது என்று இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றன . காஸியாபாத்தின் வசுந்தரா பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்துக்கும் நஸீர் என்ற மற்றுமொரு உணவகத்துக்கும் பூபேந்திர தோமர் என்கிற பிங்கி சவுத்ரி தலைமையிலான ஒரு அமைப்பு சுமார் 100 ஆட்களுடன் சென்று அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர் இது குறித்து கூறுகையில், எங்கள் நோக்கம் கன்வார் யாத்திரையின் போது அனைத்து அசைவ உணவு விற்பனை கடைகளும், அசைவத்தை தவிர்க்க வேண்டும். அப்படி அவர்கள் கடையை திறக்க விரும்பினால், சைவ உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும் என்று கூறினார்.

அசைவம் இல்லாததால் குறையும் வாடிக்கையாளர்கள்

இது தொடர்பாக காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிக்கன் உணவு வகைகளுக்கான கே.எஃப்.சி உணவகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சைவ உணவு மட்டுமே விற்கப்படுவதால் வாடிக்கையாளர் வருகை 70% சரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புனித யாத்திரை

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்க்கொளவது வழக்கம்.. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்..

இதில் ஏராளமான இந்து பக்தர்கள் நீண்ட தூரம் நடந்தே செல்வார்கள். அதேபோல இந்த வருடமும் இந்த கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும்..

yogi

முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

அப்படி யாத்திரை செல்லும் வழிகளில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும் அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்களை வெளியில் தெரியும்படி பலகைகள் வைக்க வேண்டும் என்றும் அம்மநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கே.எஃப்.சி கடையின் வெளியே நூற்றுக்கணக்கான இந்து ரக்‌ஷா தளம் அமைப்பினர், கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றன..