செய்தியாளர்: விக்ரம் ரவிசங்கர்
சுதந்திரத்திற்கு முன்பு 1892ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மாறாக, மொழிக்குடும்பங்களின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, உருது, அஸ்ஸாமி, சிந்தி, ஒடியா, காஷ்மீரி, ராஜஸ்தானி, போஜ்புரி, அவதி, மைதிலி போன்ற மொழிகளை உள்ளடக்கிய இந்தோ - ஆரியன் மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகளை பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 73%ஆக இருந்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கோண்டி, மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிகள் பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை 20%ஆக இருந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பான, 1951 கணக்கெடுப்பில், மொழி வாரியாக மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஆனால், அப்போதும்கூட, இந்திக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்தி, உருது மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கை, இணைத்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், இந்த 3 மொழிகளையும் பேசுவோரின் எண்ணிக்கை 14.9 கோடியாக இருந்துள்ளது. இது, ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 42.01% ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் தெலுங்கு 9.24% ஆகவும், மராத்தி 7.57% ஆகவும், தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 7.43% ஆகவும் 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக நடத்தப்பட்ட 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 52 கோடியே 83 லட்சம் இந்தி பேசும் மக்கள் இருக்கிறார்கள்.
இது இந்திய மக்கள்தொகையில் 43.63% ஆகும். இந்தியை இரண்டாவது மொழியாக பேசுபவர்களின் எண்ணிக்கையை சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை 69 கோடியே 2 லட்சமாகவும், மொத்த மக்கள் தொகையில் 57.1% ஆகவும் அதிகரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1951ல உருது, பஞ்சாபி மொழிகளுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொண்டுபோது, 42 சதவீதமாக இருந்த இந்தி பேசுகிறவர்களின் எண்ணிக்கை, அடுத்த அரை நூற்றாண்டில், தனி மொழியாக கணக்கெடுத்தப்போது, 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியை, ஆதிக்க மொழி என சொல்வதுக்கான காரணமும் இதுதான்.