மகாராஷ்டிரா, இந்தி எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | இந்தி மொழி கட்டாயம்.. வெடித்து கிளம்பும் எதிர்ப்பு! என்ன சொல்கிறார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கைபடி, அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தேவேந்திர ஃபட்னாவிஸ்

முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மாநிலத்தின் இந்த நடவடிக்கையை ஆதரித்திருப்பதுடன், மொழிக் கொள்கையையும் பாராட்டியுள்ளார். அவர், "யாராவது ஆங்கிலம் கற்க விரும்பினால், அவர்கள் ஆங்கிலம் கற்கலாம். வேறு எந்த மொழியையும் கற்க விரும்பினால், யாரும் பிற மொழிகளைக் கற்கத் தடை இல்லை. அனைவரும் மராத்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், நம் நாட்டின் பிற மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு இதுகுறித்து யோசித்துள்ளது. நம் நாட்டில் ஒரு தொடர்பு மொழி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. அதன்பேரிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, "மராத்தி எங்கள் முதன்மை மொழி. ஆனால், இந்தி தேசிய மொழியாக இருப்பதால் அதையும் மதிக்க வேண்டும். மகாராஷ்டிராவில், நாங்கள் இயல்பாகவே மராத்தி பேசுவோம். ஆனால், இந்தி கல்வியிலும் சேர்க்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவார், ”இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மகாராஷ்டிராவின் தாய்மொழி மராத்தி. ஆனால் மராத்தி மற்றும் ஆங்கிலம், கல்வி மற்றும் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியை மூன்றாவது மொழியாக வலுக்கட்டாயமாக திணிப்பது மராத்திக்கு அநீதி இழைப்பது மற்றும் மராத்தி பேசுபவர்களின் அடையாளத்தின் மீதான தாக்குதல் ஆகும்" என அவர் கண்டித்துள்ளார்.

ராஜ் தாக்கரே

அதேபோல், இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரான ராஜ் தாக்கரே, ”மகாராஷ்டிராவை இந்தி என்று சித்தரிக்க முயற்சித்தால், இங்கு ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, “பல மாநிலங்கள் இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராத்தி உட்பட 25 இந்திய மொழிகள் பாதிக்கப்பட்டுள்ளது” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.