மும்மொழியை கடைபிடிக்கும் இந்தி மாநிலங்களின் நிலவரம்.. அங்கெல்லாம் மூன்றாவது மொழி இதுதான்!
இந்தி அல்லாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் நிலையில், இந்தி மாநிலங்கள் மூன்றாவது மொழியாக தென்னக மொழிகளை பயிற்றுவிக்க 1968ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்தி மாநிலங்கள் தென்மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. மாறாக, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் வழங்கின. இதனால், மும்மொழியை கடைபிடிக்கும் இந்தி மாநிலங்களில் பெரும்பாலும் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதமே பயிற்றுவிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, உத்தராகண்டில் 80 சதவீத பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில் 65 சதவீதமாகவும், பிஹாரில் 56 சதவீதமாகவும் உள்ளது. இந்தி மாநிலங்களில் தென்னக மொழிகளை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்போதிலும், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அதேசமயம், சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 90 சதவீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு மத்திய அரசு அளித்த தகவலின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 3 பிராந்தியங்கள் மட்டுமே மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை. ஏனைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கொண்டன. சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 61.6 சதவீத பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. 74.7 சதவீத மாணவர்கள் மும்மொழி பயில்கின்றனர். இந்தப் பட்டியலில், குஜராத், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன.