இந்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்துடன் REACH என்கிற அரசுசாரா அமைப்பு சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய நகரங்களில் காசநோயாளிகளிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஆய்வில் பங்கேற்ற 11,564 பேரில் 36.6 சதவீதம் புலம்பெயர் தொழிலாளர்கள். இவர்களில் 29% ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 66% புலம்பெயர் தொழிலாளர்களில் அடிக்கடி வெவ்வேறு மாவட்டங்களுக்குப் பணிநிமித்தமாக இடம்பெயர்கிறார்கள். தொடர்ந்து ஒரே மாவட்டத்தில் வசிக்க முடியாததால் இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையில் தடை ஏற்படுகிறது.
இவர்களின் பணிச்சூழலும் நோயின் தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த அதிகாரபூர்வ ஆவணப்படுத்தல் இல்லாததால் இவர்களது நோய்களைக் கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் கடினமாக உள்ளது.