கும்பமேளாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி மகாகும்பமேளா விழா தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் புனித நீராட நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். வரும் 26-ம் தேதி வரை கும்பமேளா நடைபெறவுள்ளது.
இதனால், பிரயாக்ராஜ் நகருக்கு வெளியே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு மேலாக உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பக்தர்கள் சாலைகளில் காத்துக்கிடப்பதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பமேளாவிற்காக 10 கோடி ரூபாயை செலவு செய்ததாக உத்தர பிரதேச அரசு கூறும்நிலையில், பக்தர்கள் ஏன் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் என கேள்வி எழுப்பினார். இதனிடையே, பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிரயாக்ராஜ் நகர் ரயில்நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் 14ஆம் தேதி வரை கும்பமேளாவில் பங்கேற்க வர வேண்டாமெனவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.