செய்தியாளர் - ராஜ்குமார்.ர
வெறும் 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. 56 பேர் உயிரிழப்பு.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. என உத்தரப்பிரதேசம் கனமழையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி காலை முதல் 27-ம் தேதி காலை வரை மட்டும், மாநிலத்தில் சராசரியைவிட பல மடங்கு அதிகமாக மழை பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 48 மணி நேரத்தில் மட்டும் 97.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்துக்கான மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரி மழை அளவு வெறும் 4.5 மில்லிமீட்டர் மட்டுமே. அதாவது, வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமான மழை கொட்டித் தீர்த்துள்ளது. மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 56 மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மழை தொடர்பான சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 46 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 1,020-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 107 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மற்றும் சேதம் தொடர்பான முழுமையான கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கனமழைக்கு முக்கிய காரணமாக வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், பரேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பஹ்ரைச், லக்கிம்பூர் கேரி, அம்ரோஹா, பிலிபித், ஷாஜஹான்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அது 60 கிலோமீட்டர் வேகம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது