டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதோடு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல், சிக்கிம், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததுபோலவே, தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய 15 விமானங்களில் 8 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 5 விமானங்கள் லக்னோவுக்கும், 2 விமானங்கள் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டன. கனமழையால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதையும் காண முடிந்தது.
கனமழை காரணமாக ஹரியானாவின் குருகிராம் பகுதியில் சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹரியானாவின் குருகிராம், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக குருகிராமின் இஃப்கோ சவுக் முதல் டெல்லி மஹிபால்பூர் இடையேயான நெடுஞ்சாலையில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். செவ்வாயன்று மாலை மரோட்டானில் இருந்து கும்மாரிவின் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பாலு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பேருந்தில் 28 முதல் 35 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து அறிந்த உடன் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீரில் கனமழை, பனிப்பொழிவு ஆகியவற்றின் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாலும், பனிப்பொழிவு காரணமான பனிக்கட்டிகள் சாலையில் உறைந்திருப்பதாலும் போக்குவரத்து தடைபட்டது. குறிப்பாக பீர் கி காலி பகுதியில் சாலைகளில் பனிப்பொழிவு காரணமாக முஹல் பகுதியில் சாலை மூடப்பட்டுள்ளது. புல்டோசர்கள் மூலம் பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.