31% இதய நோய்கள், ஆய்வில் தகவல் pt web
இந்தியா

இந்தியாவில் ஏற்படும் உ*ரிழப்புகளில் 31% இதய நோய்களே காரணம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

PT WEB

இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புதிய ஆய்வறிக்கையை, இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கை இந்தியர்களின் இதயத்தில் நெருப்பை வீசும் விதமாக அமைந்துள்ளது.

கோப்புப்படம்

இந்தியாவில் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகளை, மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணங்களில், தொற்றா நோய்களால் 56.7 விழுக்காடு பேர் உயிரிழந்துள்ளனர். இது, கொரோனா காலமான 2020 - 2022ஆம் ஆண்டில் 55.7 விழுக்காடாக இருந்தது.

தொற்று, பிரசவம், பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகளால் 23.4 விழுக்காடு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இது, கொரோனா காலமான 2020-22ஆம் ஆண்டுகளில் 24 விழுக்காடாக இருந்தது. 30 வயதுக்கும் மேற்பட்டோரில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேரிடும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் பிரதான காரணமாக உள்ளன. இந்த உயிரிழப்புகளின் விழுக்காடு 31 என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.

தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் என்ற வகையில், 10.5 விழுக்காடு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வகையில் பெரும்பாலும், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதியோர்தான், உயிரிழந்துள்ளனர். சுவாச தொற்றுகளால் 9.3 விழுக்காடு மரணங்களும், சுவாச பாதிப்பு நோய்களால் 5.7 விழுக்காடு மரணங்களும், ஜீரண மண்டல நோய்களால் 5.3 விழுக்காடு மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கோப்புப் படம்

15 முதல் 29 வயதுக்கு உட்பட்டோரின் மரணத்துக்கான காரணம் என்ற வகையில், தற்கொலை தான் பொதுவான காரணம் என்ற அதிர்ச்சியும் ஆய்வறிக்கையில் கிடைத்துள்ளது. இந்த வயதுடையோரின் உயிரிழப்புக்கு உள்நோக்கத்துடன் காயம் ஏற்படுத்துதலும் காரணமாக அமைந்துள்ளது. விபத்துகள் தவிர உள்நோக்கம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் காயங்களால் 3.7 விழுக்காடு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த உயிரிழப்புகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்த புள்ளிவிவரங்கள், நாட்டில் ஏற்படும் மரணங்கள், அதை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்த புரிதலை மேம்படுத்த உதவும் என்று, ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.