இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். விஜயநகர் மாவட்டத்தில் ஹம்பி அருகே விடுதி ஒன்றில் தங்கியிருந்த அந்தப் பெண், விடுதியை நடத்தும் பெண் மற்றும் 3 ஆண் சுற்றுலாப் பயணிகள் ஆகிய 5 பேரும் சனாபூர் ஏரி அருகே துங்கபத்ரா கரையில் கடந்த மார்ச் 6ஆம் தேதி இரவு நட்சத்திரங்களை ரசித்தபடியே கிட்டார் வாசித்துக்கொண்டு இயற்கையை ரசித்து மகிழ்ந்துள்ளனர். அப்போது அங்குச் சென்ற 3 பேர் அவர்கள் அருகே பைக்கை நிறுத்திவிட்டு பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டிருக்கின்றனர்.
தவிர, பணம் கேட்டும் தகராறு செய்துள்ளனர். அவர்கள் பணம் தர மறுக்கவே, பைக்கில் வந்த 3 பேரும், ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் கால்வாய்க்குள் தள்ளிவிட்டு, இஸ்ரேல் பெண் மற்றும் விடுதி நடத்தும் பெண் ஆகிய இருவரையும் இழுத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், விடுதி நடத்தும் பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.9,500 பணம் மற்றும் 2 மொபைல் போன்களையும் தூக்கிச் சென்றுள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 2 பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கால்வாய்க்குள் தள்ளிவிடப்பட்ட 3 ஆண் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மார்ச் 8ஆம் தேதி இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நபர் கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கால்வாயில் உயிரிழந்த நபர் ஒடிசாவைச் சேர்ந்த பிபாஸ் நாயக் (29) என தெரியவந்துள்ளது. இவர், கருணை, நம்பிக்கை மற்றும் சாகச மனப்பான்மைக்கு பெயர் பெற்றவராக அறியப்படுகிறார். புதுடெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் மனிதவள மேலாளராகப் பணியாற்றிய பிபாஸ் நாயக், இந்தியா முழுவதும் தனது சைக்கிளில் பயணம் செய்தவர் ஆவார்.
இந்த நிலையில், இஸ்ரேல் சுற்றுலாப் பயணி மற்றும் விடுதிப் பெண்ணை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கப் போய் தன் உயிரை இழந்திருக்கிறார்.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள டெராபாடி கிராமத்தைச் சேர்ந்த பிபாஸ், ஆக்ரா மறைமாவட்டத்தின் பிஷப்பும் வட இந்திய திருச்சபை (CNI) சினோட்டின் நடுவருமான பி.கே. நாயக்கின் மகனாவார். உயர்படிப்புக்காக சென்னைக்குச் செல்வதற்கு முன்பு அவர் புவனேஸ்வரில் உள்ள ஸ்டீவர்ட் பள்ளியில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்றார். பின்னர் மும்பையில் எம்பிஏ பட்டம் பெற்றார். திருமணமாகாதவராகவும் பயணத்தின் மீது ஆர்வமுள்ளவராகவும் இருந்த பிபாஸ், கர்நாடகாவிற்குச் சென்றபோது தாக்குதலில் இருந்து தப்பியவர்களுடன் நட்பு கொண்டிருந்தார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.