குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் இன்று மதியம் 1.40 மணியளவில் விபத்திற்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்தியாவில் இதுவரை நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில், தற்போது வரை 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடைய விமானம் விழுந்த பகுதியில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் அப்போது உணவு அருந்தியதாகக் கூறப்படுகிறது.
விடுதி கட்டடத்தின் சாப்பாட்டுப் பகுதியின் மேல் விமானம் மோதியதால், மாணவர்கள் சிலர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயம்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தகவல்படி, 5 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.